முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரிசு அரசியலை மக்கள் புறக்கணித்தும் காங்கிரசார் பாடம் கற்கவில்லை - சோனியா தேர்வு குறித்து சிவராஜ்சிங் சவுகான் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

புவனேஷ்வர் : கடந்த மக்களவைத் தேர்தலோடு மக்கள் வாரிசு அரசியலை நிராகரித்து, புறக்கணித்து விட்டார்கள். ஆனால், அதிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்கவில்லை. இன்னும் கட்சியை நடத்த ராகுல் காந்தி, அல்லது சோனியா காந்தி வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நடந்தது. காரிய கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் காங்கிரஸ் தலைவர் பதவியை தொடர விருப்பமில்லை என ராகுல் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதையடுத்து சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான சுவராஜ் சவுகான் விமர்சனம் செய்துள்ளர். புவனேஷ்வரில் நேற்று நிருபர்களுக்கு சிவராஜ் சிங் சவுகான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் வாரிசு அரசியலை நிராகரித்து விட்டார்கள், புறக்கணித்து விட்டார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி அதிலிருந்து இன்னும் பாடம் கற்கவில்லை. ஆனால் பா.ஜ.க.வைப் பாருங்கள். இந்த கட்சியில் உள்ள தலைவர்கள் இயற்கையாக வளர்வார்கள். கட்சியும் வளர்ந்து விடும். ஆனால், காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தைச் சுற்றித்தான் இருக்கிறது.

மக்கள் அளித்த பாடத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி கற்க விருப்பமில்லை. காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்னும் ராகுல்காந்திதான் தலைவராக வேண்டும். சோனியா காந்திதான் தலைவராக வேண்டும். கட்சியை வழிநடத்த அவர்கள்தான் சரியானவர்கள் என கோருவது வியப்பாக இருக்கிறது.

உத்தரபிரதேசம் மற்றும் பீகார் பொதுத் தேர்தலில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், சாதி அரசியல் ஆகியவற்றை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள் மக்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டன. அதே போல மேற்கு வங்கத்தில் மக்களை திருப்திபடுத்தும் அரசியலையும் மக்கள் நிராகரித்து வருகிறார்கள். மக்கள் தேசியவாதத்தையும், வளர்ச்சியையும்தான் விரும்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி தங்களின் தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும். அதில் தோல்வி அடைந்தால் யாரும் அந்த கட்சியைத் காப்பாற்ற முடியாது. இவ்வாறு சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து