370-வது சட்டம் ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்படும் - சென்னையில் அமித் ஷா திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Amit Shah 2019 08 11

சென்னை : 370-வது சட்டம் ரத்து செய்யப்பட்டதைத்தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடர்பான ஆவண புத்தகத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் நேற்று வெளியிட்டார். மாநிலங்களவைத் தலைவராக உள்ள துணை ஜனாதிபதியின் சாதனைகளையும், மாநிலங்களவையின் செயல்திறனையும், ஆற்றலையும் உயர்த்துவதற்கான இவரின் முன்முயற்சிகளையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது. இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், ராஜஸ்தான் மத்திய பல்கலை கழக வேந்தர் கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன், அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன், பேட்மிண்டன் அணியின் இந்திய பயிற்சியாளர் கோபிசந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தநிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-

தமிழில் பேச எனக்கு ஆர்வம் உண்டு. நான் முயற்சிகள் மேற்கொண்டேன். ஆனால் பேச முடியாமல் போனது. நிச்சயம் விரைவில் பேசுவேன். உள்துறை அமைச்சர் என்ற முறையிலோ பா.ஜ.க. தலைவர் என்ற முறையிலோ நான் வரவில்லை. வெங்கையா நாயுடுவின் மாணவர் என்ற முறையில் நான் பங்கேற்றுள்ளேன். அவரது வாழ்க்கை மாணவர்கள், இளைஞர்கள் கற்று கொள்வதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.

காஷ்மீரில் 370-வது சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என வெங்கையா நாயுடு போராடினார். காஷ்மீர் பிரச்னையை ஒரு கண்ணில் அடிபட்டால் மற்ற கண்ணில் வலி ஏற்படுவது போல் என அவர் கூறியுள்ளார். 370-வது  சட்ட மசோதா ரத்து செய்யப்பட்ட போது வெங்கையா துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபா தலைவராகவும் இருந்தார் என்பது தனிச்சிறப்பு ஆகும். 370-வது சட்டம் ரத்து செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். 370-வது சட்டம் ரத்துக்கு பிறகு, மற்றவர்களுக்கு குழப்பம், ஆனால் நான் தெளிவாக இருந்தேன். மேலும் இந்த சட்ட ரத்து மூலம் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் .

அவரது வாழ்நாளில் ஏ.பி.வி.பி., சட்டசபை உறுப்பினர், சிறைவாசம் என பா.ஜ.க.வில் போராட்டங்களுடன் அந்த அளவுக்கு உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். அனைவருக்கும் அறிவுரை கூறி கட்சியை வளர்த்தவர். மத்திய அமைச்சராக இருந்த போது தான் ஸ்மார்ட்சிட்டி கொண்டு வரப்பட்டது. அவசர நிலை கொண்டு வந்த போது அவர் சிறைவாசம் அனுபவித்தார். 19 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். யாரும் செல்லாத நாடுகளுக்கு வெங்கையா சென்றார். கவனித்தல், கற்றல், தலைமையேற்றல் என்ற நூல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் வழிகாட்டியாக இருக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கயைா நாயுடு பேசியதாவது:

விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி. மாணவர்கள் எல்லோரும் எப்போதும் கற்கும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நான் பொதுவாழ்வில் பலரிடம் பாடம் கற்றுள்ளேன். பொருளீட்டும் முன் கல்வி அவசியம், பொருளீட்டும் போது கற்றல் அவசியம். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும் சோர்ந்து விடவில்லை. நான் வசதி கொண்ட குடும்பத்தில் இருந்து நான் வரவில்லை. எனக்கு எந்தவொரு அரசியல் குடும்பமும் உதவி செய்யவில்லை. சாதாரணமாக பணியை துவக்கினேன். வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன். வாஜ்பாய் அருகில் தலைவராக அமர்ந்தேன். விவசாயி மகனான நான் துணை ஜனாதிபதியாக வந்த போது கண்ணீர் விட்டேன். நான் ஒன்றும் இந்த பதவிக்கு வர வேண்டும் என விரும்பியது இல்லை. கட்சி பணிகளை பார்க்க முடியாதே என்று வருந்தினேன். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இவ்வாறு வெங்கையா பேசினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து