கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்வு - மீட்பு பணிகளை தீவிரப்படுத்திய ராணுவத்தினர்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2019      இந்தியா
kerala rain 2019 08 12

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணியை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ராணுவத்தினரும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இது போல பருவமழை பெய்த போது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் தொடங்கிய மழை கேரளாவை புரட்டிப் போட்டு வருகிறது. குறிப்பாக வடகேரளத்தில் மலை கிராமங்களை மழை மூழ்கடித்து விட்டது. கேரளாவின் வயநாடு, மலப்புரம் மாவட்ட மலைகிராமங்களில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளுக்குள் இருந்தவர்கள் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து போனார்கள்.  இம்மாவட்டங்களைச் சேர்ந்த புதுமலை, கவளப்பாறை ஆகிய 2 கிராமங்களும் நிலச்சரிவில் சிக்கி புதைந்து போனது. இந்த கிராமங்களில் மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்பு படையினர் பிணமாக மீட்டு வருகிறார்கள். கவளப்பாறையில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. புதுமலையில் 4 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த 2 கிராமங்களிலும் சுமார் 80 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் இதுவரை 17 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 58 பேரை காணவில்லை. அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மாநிலம் முழுவதும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். அவர்கள் மாவட்ட வாரியாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 286 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2966 வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளன. இந்த வீடுகளின் மீது மரம் முறிந்தும், மின் கம்பங்கள் சரிந்து விழுந்தும் சேதமாகி உள்ளது.

கேரளா முழுவதும் நேற்று முன்தினம் பிற்பகலுக்கு மேல் மழை சற்று குறைந்துள்ளது. இதனால் மழை நீர் தேங்கி இருந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. மலை கிராமங்களிலும் மீட்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. வயநாடு, மேப்பாடி கிராமம், கவளப்பாறை, மலப்புரம், புதுமலை கிராமங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும், ராணுவத்தினரும் மீட்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இங்கு அதிகாரிகளும் முகாமிட்டு மண்ணில் புதைந்தவர்களை தேடி வருகிறார்கள். கண்ணூர், காசர்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இது குறித்து முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது:-

கேரளாவில் மழை சற்று ஓய்ந்து வருகிறது. இதனால் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கேரள அணைகளின் நீர் மட்டம் அபாய கட்டத்தை எட்டவில்லை. மிகப்பெரிய அணையான இடுக்கி அணையின் நீர் இருப்பு 36.61 சதவீதமே உள்ளது.இதனால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து