எனது நெருக்கடியை குறைத்தார் ஸ்ரேயாஸ் கேப்டன் விராட்கோலி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      விளையாட்டு
viratkoli 2019 08 13

Source: provided

போர்ட் ஆப் ஸ்பெயின் : ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு எனது நெருக்கடியை குறைத்தார்’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி பாராட்டினார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களது பேட்டிங் நல்ல முறையில் அமைந்தது. நாங்கள் ஏன் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம் என்பதை 2-வதாக வெஸ்ட்இண்டீஸ் அணி பேட்டிங் செய்ததை பார்த்து நீங்கள் புரிந்து இருப்பீர்கள். நடுவில் கொஞ்சம் மழை பெய்தது அவர்களது பேட்டிங்குக்கு உதவியது. இல்லையெனில் அவர்களுக்கு இன்னும் கடினமாக அமைந்து இருக்கும். இங்கு 270 ரன்களுக்கு மேல் எடுத்தால் சவாலான ஸ்கோர் என்பது எங்களுக்கு தெரியும். முதல் 3 வீரர்களில் ஒருவராவது பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டியது எப்பொழுதும் முக்கியமானதாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன் எடுக்கவில்லை. எனவே சீனியர் வீரரான நான் அந்த பொறுப்பை ஏற்று பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டியது அணிக்கு அவசியமானதாக இருந்தது. அந்த பொறுப்பை ஏற்று நான் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொரு முறை பந்து அவுட் பீல்டுக்கு செல்லும் போதும் ஈரமானது. இதனால் பந்து வீசுவது கடினமானதாக இருந்தது. விக்கெட்டை வீழ்த்தாவிட்டால் கடினம் என்று கருதி செயல்பட்டோம். அதிர்ஷ்டவசமாக எங்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தன. வெஸ்ட்இண்டீஸ் அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருந்ததால் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவை களம் இறக்கினோம். இடக்கை சைனாமேன் பவுலரான குல்தீப் யாதவால் வித்தியாசமாக பந்து வீச முடியும் என்று கருதினோம். ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவது எங்களுக்கு பேட்டிங்கிலும் வலு சேர்க்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் நம்பிக்கை மிகுந்த வீரர். அவரிடம் சரியான அணுகுமுறை இருக்கிறது. அவர் அணியின் உத்வேகத்தை தக்க வைத்ததுடன் எனது நெருக்கடியையும் குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து