மழை நீர் வீணாகாமல் தடுக்க ரூ. 1000 கோடி ஒதுக்கீடு: மேட்டூர் - கொள்ளிடம் இடையே 3 தடுப்பணைகள் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      தமிழகம்
CM Edapadi meet 2019 08 13

சென்னை : மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்ட அரசு பரிசீலனை செய்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தண்ணீர் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மேட்டூர் அணை தற்போது 101 அடியை எட்டியுள்ளது. அணையில் 66 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. மேலும் இப்பொழுது 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். இன்னும் பருவ மழை பெய்யவில்லையே, இன்றைக்கு விவசாயிகளுக்கெல்லாம் தண்ணீரை எப்படி திறப்பது என்று எண்ணிக் கொண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து விட்ட வந்தவுடனே மழை பொழியும். ஆனால் இந்த முறை கொஞ்சம் காலதாமதமாக பெய்திருக்கிறது. இருந்தாலும், நாம் நினைத்தபடி எல்லாம் வல்ல இறைவனுடைய அருளால், ஏழுமலையானுடைய அருளாசியோடு, இன்றைய தினம் மேட்டூர் அணைக்கு சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அணை முழு கொள்ளளவை எட்டும். விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான நீர் முழுவதும் இந்த ஆண்டு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் பாசன வசதியை பெறுவர் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு இந்த தண்ணீர் திறப்பின் மூலமாக, சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகின்றது. மிகப்பெரிய பாசனம் பெறுகின்ற ஒரு ஜீவநதி என்று சொன்னால் அது காவேரி நதி தான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு தேவைப்படும் மொத்த நீரின் அளவு சுமார் 339 டி.எம்.சி. ஆகும். மேட்டூர் அணையிலிருந்து 220 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் மீதமுள்ள 119 டி.எம்.சி. தண்ணீர் வடகிழக்கு பருவமழை மூலமும் உறுதி செய்யப்படும். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய்களுக்கு இன்று(நேற்று) முதல் 132 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படும். இதனால் சுமார் 45,000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதால் ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள் பயன்பெறுவார்கள். இதற்காக சுமார்  9.6 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். மேலும் காவேரி ஆற்றிலிருந்து சுமார் 155 திட்டங்களின் மூலம் தினசரி 1700 மில்லியன் லிட்டருக்கும் மேற்பட்ட தண்ணீர்  8 மாவட்டங்களிலுள்ள பொதுமக்களின் குடிநீருக்காக பயன்படுத்தப்படுகின்றது. மேலும், 20 மாவட்ட  மக்களுக்கு காவேரி நீர் குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது.

அதுமட்டுமல்லாமல், நீர் மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும், ஆக மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கின்றது. மேலும், காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து பல்லாண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்தது. அந்த தூர்வாருகின்ற நிகழ்ச்சியும் இந்த ஆட்சியில்தான் நடைபெற்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 1949 விவசாயிகள் 2.70 லட்சம் கனமீட்டர் அளவு வண்டல் மண்ணை எடுத்துச் சென்று பயனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி தண்ணீர் திறந்து விடுகின்ற பொழுது 109 அடி இருந்தது. அணையினுடைய நீரின் அளவு 71 டி.எம்.சி. இருந்தது. சென்ற ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து 210 டி.எம்.சி. தண்ணீர் பாசனத்திற்காக நாம் திறந்து விட்டோம். அதுமட்டுமல்லாமல், விவசாய மக்களுக்கு போதுமான விதை, நெல், உரம் ஆகியவையெல்லாம் இன்றைக்கு இருப்பு இருக்கின்றது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரிய நேரத்தில் வழங்கப்படும். காவேரி டெல்டா விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் மேட்டூர் கால்வாய் பாசன பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் நீரை பங்கீட்டு, நிலைமைக்கேற்ப தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைக்குமாறும், மிக அதிக மகசூல் பெற்று பயன்பெற வேண்டுமென்றும் விவசாயப் பெருங்கடி மக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு வருண பகவானின் கருணையால் டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான நீர் வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

குடிமராமத்துத் திட்டத்தை பொறுத்தவரைக்கும் முழுக்க முழுக்க விவசாயிகள்தான் அந்தத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவாக, இந்தத் திட்டம் ஒரு வெற்றிகரமாக அமையும் என்ற முறையிலே இந்தத் திட்டத்தை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2017-2018-ஆம் ஆண்டு 1,519 ஏரிகளுக்கு பரிட்சார்த்த முறையில் ரூ. 100 கோடி ஒதுக்கி அந்தப் பணியை துவக்கினோம். விவசாயிகளிடத்திலே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததன் விளைவாக, 2018-2019-ம் ஆண்டு 1,511 ஏரிகள் எடுக்கப்பட்டு ரூ. 328 கோடி இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணி முடிவுறும் நிலையில் இருக்கின்றது. விவசாயிகளுடைய கோரிக்கையை ஏற்று, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தத் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக சுமார் ரூ. 500 கோடி மதிப்பீட்டில், சுமார் 1,829 ஏரிகள் இந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுப்பணித் துறையின் கீழ் இருக்கின்ற 14,000 ஏரிகளும் படிப்படியாக தூர்வாரப்படும். ஆகவே, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரி, குளம், குட்டை போன்றவற்றை தூர்வாருவதற்கு ரூபாய் 1,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தப் பணியும் இன்றைக்கு துவங்கப்பட்டு விட்டது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இருக்கின்ற குளங்கள், ஏரிகள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு, பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலையை இந்த அரசு திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகக் கூடாது என்பதற்காக ஓடையின் குறுக்கே, நதிகளின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகின்றது. இதற்காக அரசால் ரூ. 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூபாய் 600 கோடி செலவழிக்க திட்டம் தீட்டப்பட்டு செயலாக்கத்திற்கு வந்திருக்கின்றன. மேட்டூர் அணையிலிருந்து கொள்ளிடம் வரை கிட்டத்தட்ட 5 தடுப்பணைகள் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கின்றது. 2 தடுப்பணைகள் கட்டுவதற்கு அனுமதி கொடுத்து விட்டோம். மேலும் 3 தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதற்குண்டான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கின்ற பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து