கனமழை - வெள்ளத்திற்கு நாடு முழுவதும் 500 பேர் பலி - பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2019      இந்தியா
floods impact Bihar-gujarat-kerala-assam 2019 08 14

புது டெல்லி, : இந்தியா முழுவதும் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் நேற்று வரை 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

தென் மேற்கு பருவ மழை காரணமாக இந்தியாவின் 8 மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் பீகார், குஜராத், கேரளா, அசாம் மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கேரளா

கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 91 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த 54 பேரும், மகராஷ்டிராவைச் சேர்ந்த 48 பேரும், ஒடிசாவை சேர்ந்த 8 பேரும் உயிரிழந்துள்ளனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரங்களுக்கு இடையில், குஜராத்தில் இருந்து குறைந்தது 98 பேரும், பீகாரில் 123 பேரும், அசாமில் 71 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல நபர்களைக் காணவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாநிலங்களில் இருந்து வெள்ள நீர் குறைந்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் குறைந்தது 97 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேரை இன்னும் காணவில்லை. வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மலப்புரம் மாவட்டத்தின் காவாலப்பாறா உள்ளிட்ட 80 இடங்களில் பெரியதும், சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரத்து 239 முகாம்களில், இரண்டு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் பல பள்ளிகள் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

கர்நாடகா

கர்நாடகாவை பொறுத்த குறைந்தது 54 பேர் இறந்துள்ளனர். மேலும் 12 பேர் காணவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 1,224 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 3,93,956 பேர் தஞ்சமடைந்துள்ளனர். கடலோர கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும், தெற்கு உள்துறை கர்நாடகாவின் சிக்கமகளூரு, ஹாசன், குடகு மற்றும் சிவமோகா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை ஹம்பியில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 365 பேரை மீட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 18 வெளிநாட்டவர்களும் கொப்பல் மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.

மகராஷ்டிரா

மகராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 48 ஆனது. 3 பேரை இன்னும் காணவில்லை. மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அரசிடமிருந்து 6800 கோடி ரூபாய் உதவி கோரியுள்ளார்.

குஜராத்

குஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து உள்ளது. நிலைமை மேம்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுவரை மாநிலத்தில் வெள்ளம் மற்றும் பெய்த மழையால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.

பீகார்

பீகாரில், பலத்த மற்றும் இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்து உள்ளது. 12 மாவட்டங்களில் மொத்தம் 81.57 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளான சீதாமாரி மாவட்டத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். மதுபானி மாவட்டத்தில் 30 பேரும் அரேரியாவில் 12 பேரும் பலியாகி உள்ளனர். ஷியோஹர் மற்றும் தர்பங்காவில் தலா பத்து பேரும், பூர்னியா மாவட்டத்தில் ஒன்பது பேரும் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 5 பேரும் முசாபர்பூர் மாவட்டத்தில் 4 பேரும், சுபால் மாவட்டத்தில் மூன்று பேரும், கிழக்கு சம்பரன் மற்றும் சஹர்சா மாவட்டத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

அசாம்

அசாமில் கன மழையால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தில் 71 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது.

ஒடிசா

ஒடிசாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 பேர் பலியாகி உள்ளனர். நபரங்பூர், கலஹந்தி, காந்தமால், கோராபுட் மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இடைவிடாத மழையைத் தொடர்ந்து சோனேப்பூரின் தாராபா பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இமாசலபிரதேசம்

இமாசல பிரதேசத்ததில் கனமழை பலத்த காற்று காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த வாரத்தில் மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. காங்க்ரா, சம்பா, உனா, மண்டி மற்றும் பிலாஸ்பூர் ஆகிய இடங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து