தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றத்திற்கு பரிந்துரை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2019      தமிழகம்
cm edapadi announ 2019 08 18

சென்னை : தமிழகத்தில், பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம், எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எடப்பாடி, பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் எல்லைகளை கொண்டதாக இருக்கும். சங்ககிரி முன்சீப் நீதிமன்றத்தில் இருந்து 531 வழக்குகளும், சங்ககிரி குற்றவியல் நீதிமன்றங்கள் இரண்டிலிருந்தும் 377 வழக்குகளும் மொத்தம் 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் வழக்கு தொடுத்தோருக்கு குறித்த காலத்தில் நீதி கிடைக்கும். மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஆகும். இதன் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னையில் 126 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

2011-12 முதல் 2018-19ஆம் ஆண்டுகள் வரை 456 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19ஆம் ஆண்டில் அரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 2018-19ஆம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் அம்மாவின் அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்திற்காக 1 ஆயிரத்து 265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், முசிறியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கள்ளக்குறிச்சியில் கூடுதல் சார்பு நீதிமன்றம், குழித்துறையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஸ்ரீவைகுண்டத்தில் கூடுதலாக ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நாங்குநேரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் சார்பு நீதிமன்றம் சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் வட்டங்களில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், காரியமங்கலம், விக்கிரவாண்டி, சிங்கம்புணரி, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவை வரும் ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளன. வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும் போது இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018-19ஆம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன.அரசின் இடையறா முயற்சியின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தின் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும். அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக நீதிமன்றங்களில் நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அரசால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறையில் கணினிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக பல்வேறு பதவிகளுக்கு 1188 பணியிடங்கள் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் அமைப்பதற்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பகுதி ஒரு பின்தங்கிய பகுதி. வழக்குகள் எல்லாம் சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்த நிலையை மாற்றி, ஏழைகளுக்கு குறுகிய காலத்திலேயே நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த நீதிமன்றம் திறக்கப்பட்டிருக்கின்றது. நம்முடைய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதியரசர்களும், மற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நம்முடைய தொகுதிக்கு வந்து நேரடியாக இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்ததற்கு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன் அடிப்படையிலே, விரைவில் தமிழகத்தில், பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும். விரைவாக நீதி கிடைக்கச் செய்வதைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நீதிமன்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற அரசாக என்னுடைய அரசு திகழும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, நமது சட்டத்துறை அமைச்சர் தலைமை நீதியரசர் என்ன சொல்கின்றார்களோ, அடுத்த விநாடியே அதை நிறைவேற்றுவதற்கு நேரடியாக என்னிடத்தில் வந்து கையொப்பம் பெற்றுச் செல்வார். ஆகவே, நீதிபதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எங்களுடைய அரசு செய்து கொடுக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஆசிரியர்களையும், நீதிபதிகளையும் மிகவும் மதிக்கின்றோம். நீதியரசர்களையும், ஆசிரியர்களையும், கடவுளுக்கு சமமானவர் என்று குறிப்பிடுவார்கள். ஆகவே, நீதியரசர்களையும், ஆசிரியர்களையும் இறைவனுக்கு சமமாக கருதுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை நீதிபதி நேரடியாக வந்து எடப்பாடி நீதிமன்றத்தை திறந்து வைத்தமைக்கு அவரோடு வருகை தந்த உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து