மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      தமிழகம்
sp velumani 2019 08 20

தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 11 மாநகராட்சிகளில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட செயல்பாடுகள் குறித்து சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு நடத்தினார்.

இந்தியா முழுவதும் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அதனை சீர்மிகு நகரங்களாக உருவாக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த முனைந்த நேரத்தில், எடுத்த சீரிய முயற்சியின் காரணமாக, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய 11 நகரங்கள், சீர்மிகு நகரங்களாக உருப்பெற தேர்ந்தெடுக்கப்பட்டன.

மத்திய அரசு இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு சீர்மிகு நகரத்திற்கும் 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. மத்திய அரசிற்கு இணையாக, தமிழக அரசும், 500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. தமிழகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட 11 சீர்மிகு நகரங்களில், மொத்தம் ரூ.10,440 கோடி மதிப்பீட்டில் 357 திட்டங்கள் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட 357 திட்டங்களில், 57 திட்டங்கள் - ரூ.240 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன. 184 திட்டங்கள் - ரூ.5,340 கோடியில் நடைபெற்று வருகின்றன. 10 திட்டங்கள் - ரூ.575 கோடியில் ஒப்பந்தப்புள்ளிகள் கூராய்வு நிலை 18 திட்டங்கள் - ரூ.439 கோடியில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. 15 திட்டங்கள், ரூ.625 கோடியில் ஒப்பந்தபுள்ளி கோரப்படவேண்டிய நிலையில் உள்ளன. 5 திட்டங்கள் ரூ.728 கோடியில் விரிவான திட்ட அறிக்கை கூராய்வு நிலை. 68 திட்டங்கள் ரூ.2,493 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்திய அளவில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சீர்மிகு நகர திட்ட செயலாக்கத்தில் தமிழகம் 120.72 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. மேற்படி இரண்டு திட்டங்களையும் மாநகராட்சி விரிவான ஆய்வு செய்த அமைச்சர் வேலுமணி நடைபெற்று வரும் பணிகளை, குறிப்பிட்ட காலவரையில் முடிக்கப்பட வேண்டும் எனவும், ஒப்பந்தப்புள்ளி கூராய்வில் உள்ள இனங்களை விரைவுபடுத்தி, பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ள அனைத்து திட்டங்களும் 30.09.2019-க்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைந்து முடித்து வரும் அக்டோபர் 1-ம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும் எனவும், அனைத்து திட்டங்களையும் உயர் அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்து திட்டங்களின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும் எனவும், பணிகள் அமல்படுத்துவதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் உடனுக்குடன் நகராட்சி நிர்வாக ஆணையர் / அரசு முதன்மை செயலர் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என அமைச்சர் வேலுமணி அலுவலர்களுக்கு தெரிவித்து, திட்ட அறிவித்த நாளில் இருந்து 5 வருடங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்பதனைக் கவனத்தில் கொண்டு அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் (பொறுப்பு) பாஸ்கரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஹரிஹரன்,  பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிச்சாமி, நகராட்சி  ஆணையர்கள் மற்றும் நகரப் பொறியாளர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து