கண்ணை இமை காப்பது போல ஏரிகளை காக்க வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2019      தமிழகம்
salem-cm-1 2019 08 20

கண்ணை இமை காப்பது போல ஏரிகளை காக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சியில் அபிநவம் ஏரியில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

குடிமராமத்து எனும் மிகப் பெரிய திட்டத்தின் மூலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அபிநவம் ஏரியை தூர்வாருவதால், சுமார் 424.53 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குடிமராமத்துத் திட்டமானது விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் திட்டமாக அமைந்துள்ளது. விவசாயிகளும், ஆயக்கட்டுதாரர்களும், ஏரிகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரத்தை அகற்றி, கண்ணை இமை காப்பது போல் ஏரிகளைக் காக்க வேண்டும்.  50 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த காவேரி நதிநீர்ப் பிரச்சினையை அம்மாவும், அம்மாவின் வழியில் அ.தி.மு.க. அரசும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பைப் பெற்றது. மத்தியில் எத்தனையோ பேர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பொழுது செய்யத் தவறினார்கள், ஆட்சி அதிகாரம் தான் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது.

ஆனால், அ.தி.மு.க. அரசுக்கு விவசாயிகள் தான் கண்ணுக்குத் தெரிந்தார்கள்.  விவசாயிகளின் நிலையை உணர்ந்து, அவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் போராடி, வாதாடி காவேரி நதிநீர் தீர்ப்பைப் பெற்ற அரசு அம்மாவின் அரசு. தமிழ்நாடு அரசு, நீர் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்கி, ஓய்வு பெற்ற  பொறியாளர்களைக் கொண்ட குழுவை அமைத்து, அக்குழுவின் ஆய்வறிக்கையின் படி அம்மாவின் அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலில் நீர் மேலாண்மை சிறப்பாக இருப்பதால், அதனை அறிந்து வந்து தமிழ்நாட்டில் செயல்படுத்தும் நோக்கில், என்னுடைய தலைமையில் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளோம். அங்கு பின்பற்றப்பட்டு வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தண்ணீரை மறு சுழற்சி செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் முறை செயல்படுத்தப்படும். சொட்டு நீர் பாசன முறையில் தண்ணீரை சேமித்து வழங்குவதால், சாதாரணமாக ஒரு ஏக்கர் பாசனம் பெறும் விவசாய நிலம், சொட்டு நீர்ப் பாசனம் மூலம் 10 ஏக்கர் பாசன வசதி பெறும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பரிட்சார்த்த முறையில், பொள்ளாச்சியில் சுமார் ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் 7200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் படிப்படியாக  தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.   

மக்காச்சோளம் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, அப்பயிரை அமெரிக்கன் படைப் புழு தாக்கியதற்கு ரூபாய் 184 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தென்னை மரம் பட்டுப் போனால் அதற்கான இழப்பீடாக மத்திய அரசால் ரூபாய் நூறும், மாநில அரசால் ரூபாய் 1200 வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வேண்டுமென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அம்மாவின் அரசு மக்களின் அரசு, விவசாயிகளுக்கான அரசு. விவசாயப் பெருங்குடி மக்கள் குடிமராமத்துத் திட்டத்தினை பயன்படுத்தி மழை நீரை வீணாகாமல் சேமித்து பயன்பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து