லட்சியத்துடன் வாழ்ந்து அனைத்துத்துறைகளிலும் முன்னுக்கு வர தூண்டுகோலாக திகழ வேண்டும் - கல்லூரி மாணவியருக்கு முதல்வர் அறிவுரை

புதன்கிழமை, 21 ஆகஸ்ட் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 11

சென்னை : வாழ்வில் ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வர ஒரு தூண்டுகோலாகத் திகழவேண்டும் என்று கல்லூரி மாணவியருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறினார்.

ஈரோடு வேளாளர் கல்வி நிறுவனங்களின் பொன்விழாவை துவக்கி வைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.,

"கற்கை நன்றே கற்கை நன்றேபிச்சை புகினும் கற்கை நன்றே" என்று வெற்றிவேற்கை தெரிவிக்கிறது. ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்தாலும் கல்வி கற்க முயல வேண்டும். இதனை கூறுகையில் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

மதராஸ் செனட் ஹவுஸ் 1898-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில், கொஞ்சம் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார் ஒற்றை பெண்மணி. தென்னிந்தியாவின் முதல் பெண் பட்டதாரி என்கிற அறிமுகத்துடன் அவரது பெயர் அழைக்கப்பட, தடுமாறி மிகுந்த பயத்துடன் மேடை ஏறினார். அவரை பல்கலைக்கழக வேந்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார் கல்லூரி பேராசிரியர். அந்தப் பெண் பி.ஏ.பட்டப் படிப்பிற்கான சான்றிதழ் பெறும் சமயம் அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அவர்தான் கமலா ரத்தினம் சத்தியநாதன் அவர்கள்.

1879-ஆம் ஆண்டு ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த கமலா ரத்தினம் சத்தியநாதன் பள்ளிபடிப்பு முடிந்தவுடன் இளங்கலை வகுப்பில் பயின்றதன் மூலம் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் பட்டதாரி பெண் ஆவார்.

பின்னர் இவர் சத்தியநாதன் என்ற ஒரு பேராசிரியரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பின்னர் சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்தார். அவரது கணவரின் தூண்டுதலின்படி 1901-ஆம் ஆண்டு எம்.ஏ.தேர்வு எழுதி ‘தென்னிந்தியாவின் முதல் முதுகலைப் பெண் பட்டதாரியானார்’. பின்னர், இவர் 1901-ஆம் ஆண்டு ‘இந்தியன் லேடீஸ் மேகசீன்’ என்ற பத்திரிகையை தொடங்கினார். இந்தியாவில் பெண் ஒருவரால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்ட முதல் பெண் பத்திரிகை இதுவே. பின்னர் இவரது வாழ்க்கையில் சோதனைகளாக குடும்பத்தில் பல இழப்புகள் ஏற்பட்டன. அதனைக் கண்டு மனம் தளராமல் 1919-ஆம் ஆண்டு தனது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வேண்டும் என்பதற்காக தனது வீட்டை விற்று, இங்கிலாந்து நாட்டுக்கு தனது குழந்தைகளுடன் சென்றார். இங்கிலாந்தில் அவரது மகன் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை இருந்து பின்னர் நாடு திரும்பினார். தன் மகனுடன் இந்தியா முழுக்க ஒரு கலெக்டரின் தாய் என்ற அடையாளத்துடன் பயணம் செய்தார்.

பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று எதிர்ப்பு இருந்த அந்தக் காலத்திலேயே, அந்த எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றதோடு மட்டுமல்லால், பெண்கள் உரிமையை காக்க பத்திரிகை நடத்தி, மகளிருக்காக சமூக நிறுவனங்களை நிறுவிய கமலா சத்தியநாதன் போன்று நீங்களும் வாழ்வில் ஒரு லட்சியத்துடன் வாழ்ந்து, பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னுக்கு வர ஒரு தூண்டுகோலாகத் திகழவேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவிகள் படிக்கும்போது அவர்கள் கவனம் முழுவதும் படிப்பில்தான் இருக்கவேண்டும். உங்களது பெற்றோர்கள் உங்கள் வாழ்வு சிறக்க பல கனவுகள் காண்கின்றார்கள். அவர்களின் கனவை நனவாக்க நீங்கள் பாடுபட வேண்டும். உங்களுக்கு சமுதாய பொறுப்பு இருக்கிறது. எளிதாக தட்டி கழித்து விட முடியாத பொறுப்பு உள்ளது. உங்களை வளர்த்துவிட்ட நிறுவனத்திற்கும், உங்கள் மாநிலத்திற்கும், தேசத்திற்கும் உங்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். நமது குறிக்கோள் கல்வியை நல்ல முறையில் கற்பது. பின்னர் நாம் படித்த இந்த கல்வியை கொண்டு, நாட்டிற்கு நல்லது செய்வதாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து