ஜெட்லியின் மறைவு இந்திய திருநாட்டிற்கு பேரிழப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019
cm edapadi 2019 08 12

சென்னை : அருண் ஜெட்லியின் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பேரிழப்பாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,

மத்திய நிதித் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், அரசியல் உலகில் பிரபலமான தலைவர்களில் ஒருவராகவும் விளங்கிய அருண் ஜெட்லி, உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியும், மிகுந்த வருத்தமும் அடைந்தேன். அருண் ஜெட்லி, தன்னுடைய மாணவ பருவத்தில் கல்வித் திறன் மற்றும் பிற கல்வி சாரா செயல்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். டெல்லி பல்கலைக் கழகத்தில் மாணவ சங்கத் தலைவராகவும், இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக இருந்துள்ளார். இந்தியத் திருநாட்டின் நிதித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், மக்களின் நன்மை மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியவர். பாராளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அன்பாக பழகக் கூடிய பண்பாளர்.            

அருண் ஜெட்லியின் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சித் தொண்டர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து