குழந்தையை ஆறுதல்படுத்தும் தந்தையை போல பிரதமர் மோடி நடந்து கொண்டார் - சிவனின் உறவினர்கள் நெகிழ்ச்சி!

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
sivan-pm modi 2019 09 07

சென்னை : குழந்தையை ஆறுதல் படுத்தும் தந்தையைப் போல தான் பிரதமர் மோடிநடந்து கொண்டார் என்று இஸ்ரோ தலைவர் சிவனின் உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் விண்வெளித்துறையில் 130 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை இஸ்ரோவின் தலைவர் சிவன் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம் கடந்த ஜூலை 22-ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிக்கோட்டாவின் சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 3.84 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து நிலவை அடைந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு லேண்டர் விக்ரம் தரையிறங்கத் தொடங்கியது. நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் சரியாக தரையிறங்கி வந்தது. ஆனால், அதன் பிறகு லேண்டர் விக்ரமிடமிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைக்கவில்லை. இதனால் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முயற்சியில் இந்தியாவின் சந்திராயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தது. இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலை அடைந்தனர். இஸ்ரோவின் தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுததும், பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து ஆறுதல் அளித்ததும் முக்கியமாக தமிழக மக்களை கலங்க வைத்தது.

இஸ்ரோ தலைவர் சிவனின் மாமா ஏ.சண்முகவேல் உள்ளிட்ட உறவினர்கள் கூறுகையில்,

குழந்தை பருவத்திலிருந்தே, சிவன் படிப்பில் சிறந்தவராக இருந்தார். மேலும், யாருடைய உதவியில்லாமல் அவரே படித்துக் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் சந்திரயான் - 2 திட்ட வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கும் போது, அவர் கலங்கியதின் உணர்வை எங்களால் உணர முடிகிறது. அந்த இடத்தில், குழந்தையை ஆறுதல் படுத்தும் தந்தையை போலத்தான் பிரதமர் மோடி நடந்து கொண்டார். அவரது கடின முயற்சி, நேர்மை, தன்னம்பிக்கை குறித்து எங்களுக்குத் தெரியும். இந்த பின்னடைவை அவர் எதிர்கொண்டு வெற்றி பெறுவார். பிரதமர் உள்ளிட்ட 130 கோடி இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்றுவார். அதுபோன்று சிவனின் இந்த சாதனைக்கும், அவரது மனைவி மாலதி உறுதுணையாக இருந்துள்ளார். அவர் வீட்டை சிறப்பாக நிர்வகிப்பதோடு, சிவனுக்கு ஒரு உந்துதலாக இருந்து வருகிறார். இதனாலே சிவன் முழுவதுமாக நாட்டுக்காக பணியாற்றி வருகிறார் என்று தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து