அமெரிக்க ஓபன் டென்னிஸ் 4 - வது முறையாக கோப்பையை கைப்பற்றி ரபேல் நடால் அசத்தல்

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      விளையாட்டு
Rafael Nadal champion 2019 09 09

நியூயார்க் : நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 - வது முறையாக கோப்பையை கைப்பற்றி ரபேல் நடால் அசத்தினார்.

 இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன், நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடாலும், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ்வும் மோதினார்கள். போட்டியின் துவக்கம் முதலே இரு வீரர்களும் அபாரமாக ஆடினார்கள். ஒருவருக்கொருவர் சளைக்காமல் பந்துகளை பறக்க  விட்டனர். எனினும் நடேல் 7 -5, 6 -3 என முதல் இரண்டு செட்களையும் வென்றார்.

இதன் பின்னர் மெத்வதேவ் ஆக்ரோஷமாக ஆடினார். நடால் செய்த சிறு,சிறு தவறுகளையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மெத்வதேவ் அடுத்தடுத்து 2 செட்களை 5 - 7, 4 -6 என கைப்பற்றி ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். இதனால்  இருவீரர்களும் 2 -2 என சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கக்கூடிய கடைசி செட் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இருவீரர்களும் வெற்றிபெற்று கோப்பையை தட்டிச்செல்ல வேண்டும் என்று விடாமுயற்சியுடன் ஆடினார்கள். இருந்த போதிலும் நடால், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி நேர்த்தியாக விளையாடினார். இறுதியில் கடைசி செட்டை 6 -4 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் 19 - வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் வென்றார். அமெரிக்க ஓபனில் 4 - வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் ரோஜர் பெடரின் உலக சாதனையை சமன் செய்வார். தற்போது 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் பெடரர் முதலிடத்தில் உள்ளார். 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் நோவாக் ஜோகோவிச் 3 - வது இடத்திலும், 14 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ் 4 - வது இடத்திலும் உள்ளனர்.

இது குறித்து சாம்பியன் பட்டம் வென்ற நடால் கூறியதாவது:-  இது எனது டென்னிஸ் வாழ்க்கையல் மிகவும் உணர்ச்சிகரமான இரவுகளில் ஒன்றாகும். மேலும் இது ஒரு அற்புதமான இறுதிப்போட்டி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து