இந்தியாவிடம் அரசியல் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      உலகம்
imran party former MLA 2019 09 10

சண்டிகர் : பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி, பிரதமர் இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர், இந்தியாவிடம் அரசியல் தஞ்சம் கோரி உள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பல்தேவ் குமார் (வயது 43). சீக்கியரான இவர், கைபர் பாக்துங்வா மாகாணத்தின் பரிகோட் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கடந்த மாதம் 12-ம் தேதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திற்கு மூன்று மாத விசாவில் வந்த இவர், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இந்தியா அரசியல் தஞ்சம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

பாகிஸ்தானில் மத சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. மக்களை குறிப்பதாக சிறுபான்மையினரை பாதுகாக்க பிரதமர் இம்ரான்கான் தவறி விட்டார். பாகிஸ்தான் ராணுவமும் ஐ.எஸ்.ஐ அமைப்பும் இம்ரான்கானுக்கு உத்தரவிட்டு அதன்படி செயல்பட வைக்கின்றன. சீக்கிய மதகுழுவின் மகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டபின், பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை உணர்ந்து விட்டேன். மதத் தலைவர்களே அங்கு மதிக்கப்படவில்லை என்கிற போது, நான் சொல்வதை யார் கேட்பார்கள்? எனவே, இனி நான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. இந்திய அரசு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடைக்கலம் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி எனக்கு அடைக்கலம் தருவார் என நம்புகிறேன். இது தொடர்பாக முறைப்படி மனு அளிப்பேன் என்று தெரிவித்தார்.

தற்போது பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கன்னா பகுதியில் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் தங்கியிருக்கிறார் பல்தேவ் குமார். இவரது மனைவி பாவனா, கன்னா பகுதியைச் சேர்ந்தவர். இவர்களின் திருமணம் 2007-ம் ஆண்டு நடந்தது. மனைவிக்கு இந்திய குடியுரிமை உள்ளது. ஆனால் பல்தேவ் குமாரும், இரண்டு குழந்தைகளும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து