முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் 100 நாள் சாதனைகள் - நிர்மலா சீதாராமன் பட்டியலிட்டு பேட்டி

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கடந்த 100 நாளில், காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து, வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

பிரதமராக மோடி இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர், மத்திய அரசு 100 நாளில் செய்த பணிகள் குறித்து சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,

ஜன சங்கமாக இருந்த போதும், பா.ஜ.க. துவங்கிய பின்னரும், காஷ்மீர் சிறப்பு சட்டத்துக்கு எதிராக பேசி உள்ளோம். சிறப்பு சட்டம் ரத்து குறித்து, ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் கூறியுள்ளோம். இந்த சட்டப்பிரிவால் மாநிலத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. வளர்ச்சியும் தரவில்லை. அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்ட பின்னர், தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

சிறிய வங்கிகள் இணைப்பால் நாடு வளர்ச்சி அடையும். நாட்டின் பொருளாதாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். வங்கிகள் இணைப்பு குறித்து, அந்தந்த வங்கிகள் நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைய வங்கிகள் இணைப்பு உதவும். பொருளாதாரம் வேகமாக வளர ஜி.எஸ்.டி. உதவுகிறது. முத்தலாக் உள்ளிட்ட பெண்கள் உரிமை மீட்டெடுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இரண்டு ஆண்டில், 1.95 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயம் செய்யப்படும். 2022-க்குள் , அனைவருக்கும் மின்சாரம், குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வோம். ஏழைகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் குறைந்த செலவில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 100 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 100 கோடி பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. 16 ஆயிரம் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நிதியுதவி அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. ரூ. 6 ஆயிரம் நிதியுதவி, ஆண்டுக்கு 3 தவணையாக வழங்கப்படுகிறது.

முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் விதத்தில் இருந்த தேவையில்லாத சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்தை பராமரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. சந்திரயான்- 2 திட்டம் 99.9 சதவீத வெற்றி பெற்றுள்ளது. முழுமையாக வெற்றி பெற மத்திய அரசு உதவும். இஸ்ரோவின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். உள்கட்டமைப்பு துறையில் 100 கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்சார கார் விற்பனையை அதிகரிக்க சலுகை வழங்கப்படுகிறது.. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. மோட்டார் வாகன உற்பத்தி துறை சந்திக்கும் பிரச்னைகள் குறித்து நிதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. புதிய வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். மந்தநிலை குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து