அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா செயல்படுத்தப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2019      தமிழகம்
cm edapadi 2019 08 11

சென்னை : சேலம் மாவட்டம் தலைவாசலில் அமெரிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா செயல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 28.8.2019 முதல் 10.9.2019 வரை அரசு முறைப் பயணம் மேற்கொண்டேன். அதன்படி, 28.8.2019 அன்று இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் சென்று, அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்திறன் மேம்பாடுகளைக் கண்டறிந்து, அதனை தமிழ்நாட்டில் செயல்படுத்திட, சர்வதேச திறன் மேம்பாட்டு  நிறுவனத்துடனும், தமிழ்நாட்டில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை நிறுவிட கிங்ஸ் மருத்துவமனையுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இங்கிலாந்து நாட்டில் சபோல்க் நகரத்தில் என்ஜென் நிறுவனம் , மரபு சாரா எரிசக்தியான சூரிய எரிசக்தி, காற்றாலை எரிசக்தி ஆகியவற்றை மின்கட்டமைப்புடன் இணைக்கும் வழிமுறைகளை நான் பார்வையிட்டேன். மேலும், டெங்கு, மலேரியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை கட்டுப்படுத்துதல், அந்நோய்களை கையாளும் வழிமுறைகள் தொடர்பாக லண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசன் நிறுவனத்துடன் நோக்க அறிக்கை கையெழுத்தானது. அத்துடன், லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செயல்பாடுகளை பார்வையிட்டு, அந்நிறுவனம் பின்பற்றும் நுட்பமான வழிமுறைகளை தமிழ்நாட்டிலுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊர்திகளில் நடைமுறைப்படுத்த உள்ளோம். 29.8.2019 அன்று லண்டனில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்ற கூட்ட அரங்கில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்நாட்டில் முதலீடு செய்யவுள்ள சாத்தியக்கூறுகளை பற்றி எடுத்துக்கூறி, அதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் நன்மை பற்றியும் எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய கோரிக்கை விடுத்தேன். இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை தொடர்ந்து,  2.9.2019 அன்று அமெரிக்க நாட்டின் பபல்லோ கால்நடை பண்ணைக்கு சென்று, அங்கு அதிக பால் தரக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி உடைய கலப்பின  மாடுகளை உருவாக்கும் தொழில்நுட்பம், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்தும்  தொழில்நுட்பம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை கேட்டறிந்தேன். மேலும், 3.9.2019 அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் ரூபாய் 2,780 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம், தமிழ்நாட்டில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மேலும், Haldia Petrochemicals நிறுவனம், Naphtha Cracker Unit-உடன் கூடிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க என்னை சந்தித்து ஆலோசனை செய்தனர்.  அதனைத் தொடர்ந்து, நியூயார்க் நகரில், உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைத்திடவும், வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை ஈர்க்கவும், “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை துவக்கி வைத்தேன்.   சான் ஹீசே நகரில் 4.9.2019 அன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில், சுமார் 2,300 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 6,500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும்,  தமிழ்நாட்டில் உள்ள தொழில் முனைவோருக்கு தேவையான உதவிகள் அளிக்க  அமெரிக்க தொழில் முனைவோர் அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள Digital Accelerator திட்டத்தை துவக்கி வைத்தேன்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு தொழில் முனைவோருக்கு அவர்கள் தொடங்கும் புதுத்தொழிலுக்கு தேவையான நிதியில் 10 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும். இதற்காக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் சான் ஹீசே நகரில் “யாதும் ஊரே” திட்டத்தையும் துவக்கி வைத்தேன். 5.9.2019  அன்று அமெரிக்கா நாட்டின், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள டெஸ்லா நிறுவனத்திற்கு சென்று, சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கின்ற வகையில் அந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இயங்கிடும் வாகனங்கள், பாட்டரிகள், எரிசக்தி உற்பத்தி மற்றும் சேமிப்பு ஆகிய பணிகளை பார்வையிட்டேன். அப்போது, இந்தியாவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க டெஸ்லா நிறுவனத்திடம் கோரிக்கை வைத்தேன். மேலும், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதரால் உருவாக்கப்பட்டுள்ள ப்ளூம் எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு, மாசில்லா எரிசக்தியை எளிய முறையில் தயாரிப்பது குறித்தும்,  அத்தொழில்நுட்பங்களை அறிந்து அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்துவது குறித்தும், அந்நிறுவனத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தேன். 6.9.2019 அன்று லாஸ் ஏஞ்சலஸ், Anaheim நகர மேயர் சித்து, என்னை வரவேற்று அந்நகரில் அமைந்துள்ள கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக்கும் மையத்தை காண்பித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பில், சிறந்த தொழில்நுட்பத்தை அங்கு பயன்படுத்தி வருகிறார்கள். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுசுழற்சி செய்து, கழிப்பறை, தோட்டங்கள், மரங்களுக்கு நீர் பாசனம் செய்யவும், ஏரிகளில் தேக்கி நிலத்தடி நீரை செரிவூட்டி, அந்த நிலத்தடி நீரை குடிநீருக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பத்தையும் கண்டறிந்தேன். இதுபோன்று, கழிவு நீரை சுத்திகரித்து, மறுசுழற்சி செய்தால், சென்னை மற்றும் இதர மாநகராட்சிகளில் நன்னீர் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படும் என்பதால், சோதனை அடிப்படையில் ஒரு மாதிரி சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க,  Anaheim நகராட்சி மேயர் அனைத்து உதவிகளையும் செய்ய முன்வந்துள்ளார். இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கழிவு நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் ஒரு மாதிரி அலகை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். 

அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு, 9.9.2019 அன்று துபாய் நாட்டிற்கு சென்று, ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையின் கீழ் இயங்கும் “Business Leaders Forum” என்ற அமைப்பும், இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். இந்தக் கூட்டத்தில், 3,750 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் தொழில் துவங்கிட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 10,800-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.  அதனைத் தொடர்ந்து, துபாயில் உள்ள தொழில் முனைவோர்களோடு நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் தொடங்கிட அழைப்பு விடுத்தேன். இந்த வெளிநாட்டு பயணத்தின் மூலமாக நான் நேரடியாக கண்டறிந்த பல திட்டங்களையும், தொழில்நுட்பங்களையும், கிராமங்கள் மற்றும் நகரங்களின் கட்டமைப்புகளையும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழச் செய்ய, இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தச் சுற்றுப் பயணம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய உதவிகரமாக இருந்த  வெளிநாடு வாழ் தமிழ் சொந்தங்கள், பிற தொழில் அமைப்புகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வெளிநாடு வாழ் தன்னார்வலர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, மொத்தம் 8,835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து, 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதன் மூலமாக 35,520-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட தொழில் நிறுவனங்களுக்கு தொழில்கள் துவங்குவதற்கு உண்டான அனைத்து உதவிகளையும் எனது அரசு விரைந்து செய்து கொடுக்கும். இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் சுற்றுலாவிற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். அந்த வழியில் அம்மாவின் அரசும், சுற்றுலாவிற்கு மேலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு உகந்த சிறந்த மையங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கும்.மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருவதையும் கண்டறிந்தேன். வெளிநாட்டு முதலீடுகளை தொடர்ந்து ஈர்க்க தேவையான அனைத்து உதவிகளையும் முன் நின்று செய்யும் அமைப்புகளையும், ஒற்றை சாளர முறையையும் மேலும் வலுப்படுத்தி, அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டின் தொழில் வளத்தை பெருக்கவும், தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதிய  உத்வேகத்துடன் அம்மா அரசு செயல்பட, இந்த வெளிநாட்டு பயணம் பேருதவியாக இருந்தது. மேலும் இந்தப்பயணம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவியதுடன், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே தமிழ்நாட்டின் மீது ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் சார்ந்த அறிவுசார் புரிதலுக்கு இந்தப்பயணம் ஒரு பேருதவியாக அமைந்த ஒரு வெற்றிகரமான பயணமாக இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து