வரும் 23-ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு தொடங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      தமிழகம்
deepawali reservation govt buses 2019 08 26

சென்னை : தீபாவளி சிறப்பு பேருந்து முன்பதிவு வரும் 23-ம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகை காலத்தில் மக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. 3 ஆண்டுகள் முடிந்து இது 4-வது ஆண்டு. இது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. எந்த விதமான போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்கு ஏதுவாக ஏற்பாடுகளை போக்குவரத்து துறையும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசுத்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் இணைந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இது தொடர்பான முதல் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

எப்போதும் போல ஆந்திரா மார்க்கமாக செல்லக் கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லக் கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். சென்ற ஆண்டு முதன்முதலாக திருவண்ணாமலை செல்லக் கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. அது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால், அவர்கள் மின்சார ரயில் மூலமாக தாம்பரம் ரயில் நிலையம் வந்தவுடன், எளிதாக நகரத்தை விட்டு வெளியே செல்வதற்கு ஏதுவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த ஆண்டும் அதேபோல தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திருவண்ணாமலை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி வாயிலாக செல்லக் கூடிய பேருந்துகள், அங்கிருந்து இயக்கப்படும். அதே போல, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக் கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லக் கூடிய மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். இந்த அனைத்து பேருந்துகளையும் ஒன்றிணைத்து மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். அதே போல, ஊரப்பாக்கம் பேருந்து நிலையத்தை தற்காலிக பேருந்து நிலையமாக பயன்படுத்தி வந்தோம். தனியார் ஆம்னி பேருந்துகளிலும் அரசு பேருந்துகளிலும் முன்பதிவு செய்தவர்கள் அங்கிருந்து வசதியாகப் பயணம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தோம். இந்த ஆண்டு அங்கு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், அதை போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் இறுதியாக முடிவெடுக்கப்படும்.

பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 23 முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. சிறப்பு முன்பதிவு வரும் 23-ம் தேதி தொடங்க இருக்கிறது. அதே போல தமிழகத்தில் தொழில் நகரமாக இருக்கக் கூடிய கோவை, திருப்பூர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அதிகமான பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதற்கும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் அதற்கு உண்டான முடிவுகள் எட்டப்படும். பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் ஊர்களுக்கு மீண்டும் திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் போக்குவரத்துத் துறை செய்திருக்கிறது. அதே போல, கனரக வாகனங்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் அவை சென்னைக்குள் வராமல் இருப்பதற்காக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து