சீன அதிபர் வருகையை முன்னிட்டு பயணிகள் விமானம் பறக்க தடை

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      தமிழகம்
Chinese-President 2019 10 06

சென்னை : சீன அதிபர் வருகையை முன்னிட்டு பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகிற 11-ம் தேதி அரசு முறை பயணமாக சென்னை வருகிறார். அவரை மகாபலிபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.அப்போது சீனா - இந்தியா நல்லுறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதுடன் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின்றன. சீன அதிபர் வருகையையொட்டி சென்னை விமான நிலையம் மற்றும் அவர் செல்லும் பாதை, மகாபலிபுரம் ஆகிய இடங்களில் வரலாறு காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

11-ம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் போது விமான நிலையத்திலேயே சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் விமான ஓடுதளத்தில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். அவர் விமானம் வந்து இறங்கும் நேரத்திலும், கலை நிழ்ச்சிகள் நடக்கும் நேரத்திலும் மற்ற பயணிகள் விமானம், சரக்கு விமானங்கள் எதுவும் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வர வேண்டிய மற்றும் இங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்துக்கும் நேர பட்டியலை மாற்றி அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

சீன அதிபர் விமான நிலையத்தில் இருக்கும் நேரம் முழுவதும் எந்த விமானமும் அங்கிருந்து புறப்பட்டு செல்லவோ, தரை இறங்கவோ அனுமதிக்கப்படாது. விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியே செல்வதற்கு 5-வது மற்றும் 6-வது நுழைவு வாயில் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதுப் பொலிவுடன் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. சுவர்களில் ஓவியமும் வரையப்பட்டுள்ளது. நுழைவு வாயில் முன் பகுதியில் நீள்வாக்கில் புதிய செயற்கை பூங்கா ஒன்றும் உருவாக்கப்படுகிறது. விமான நிலைய பகுதி மற்றும் பாதையில் எந்தவித போஸ்டரும் ஒட்டக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதை மீறுவோருக்கு ரூ.1000 அபராதம் அல்லது ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், போதிய வசதிகள் பற்றி ஏற்கனவே சீனாவில் இருந்து அதிகாரிகள் குழு வருகை தந்து ஆய்வு செய்தது. அடுத்ததாக சீன சிறப்பு பாதுகாப்பு படையினர் வருகை தரவுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்வார்கள். சீன அதிபர் பயணம் செய்வதற்காக விசே‌ஷ பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட கார்கள் சீனாவில் இருந்து வர உள்ளது. இந்த கார்களை 747- போயிங் விசே‌ஷ சரக்கு விமானத்தில் சென்னைக்கு கொண்டு வருகிறார்கள். இத்துடன் அதிபர் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவருடைய முக்கிய உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பயன்படுத்தும் சாதனங்களும், பொருட்களும் இந்த விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. எத்தனை முறை  சரக்கு விமானங்கள் பொருட்களை கொண்டு வரும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட வில்லை. அதே போல் என்னென்ன பொருட்கள் வருகின்றன என்ற விவரங்களும் சொல்லப்படவில்லை. இன்னும் ஒரிரு நாட்களில் இந்த சரக்கு விமானங்கள் சென்னை வரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீன அதிபரின் பாதுகாப்பு தொடர்பாக விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர், சென்னை போலீசார் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சீன அதிபர் வரும் போது அமைப்புகள் சார்பில் போராட்டமோ, எதிர்ப்பு நடவடிக்கைகளோ நடந்து விடக் கூடாது என்று கண் காணிக்கப்பட்டு வருகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து