பிரச்சினைகளை தவிர்க்க அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு இனி ஆதார் கட்டாயமாக வாய்ப்பு? மத்திய அரசிடம் அனுமதி கேட்கும் தேசிய தேர்வு முகமை

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      இந்தியா
NEET Exam 2019 05 06

புது டெல்லி : அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமாகலாம் எனத் தெரிகிறது. இது குறித்து தேசிய தேர்வு முகமை மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
பிரச்சினைகளை தவிர்க்க

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முதலில் உதித் சூர்யாவும், அவரது தந்தை வெங்கடேசனும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம், இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் நீட் தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமையின் பொது இயக்குநர் வினீத் ஜோசி கூறியுள்ளார்.

பயோமெட்ரிக் முறை

மத்திய அரசு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மாணவர்களின் கைரேகை மற்றும் கருவிழி படலத்தின் ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் சேகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சேகரிக்கப்படும் இந்த இரு தரவுகளும், விண்ணப்பம், தேர்வு, கலந்தாய்வு, அனுமதி ஆகிய பல்வேறு நடைமுறைகளில் சரிபார்க்கப்படும் என்றும் வினீத் ஜோசி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நீட் தேர்வு எழுதும் மாணவர்களிடம் இரு முறை கைரேகை பெறப்படுவதாகவும் ஆனால் அவை காகிதத்தில் மட்டுமே பெறப்படுவதாகவும், டிஜிட்டல் பதிவாக இல்லை எனவும் வினீத் ஜோசி கூறியுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, மாணவர்களின் தரவுகளை மாநில அரசு கேட்டிருப்பதாக கூறியுள்ள வினீத் ஜோசி, இது போல் முறைகேடு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இதுபோல நடைபெறாத வண்ணம் விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், அதே வேளையில், மாணவர்களுக்கு கடினமாக இல்லாத வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார்.

நீட் தேர்வு நடந்த போது ஏராளமான கட்டுப்பாடுகள் மாணவ, மாணவிகளுக்கு விதிக்கப்பட்டன. உதாரணமாக மாணவிகளின் தோடுகளை கழற்றுவது, மாணவர்களின் முழுக் கை சட்டையை அரைக்கை சட்டையாக கத்தரிப்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்படியிருந்தும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்திருப்பதுதான் விசித்திரமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் அம்பலமாகி இருப்பதால் நீட் தேர்வுக்கும் ஆதார் கட்டாயம் என்ற சூழ்நிலை விரைவில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து