முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற ஸ்டாலின் முயற்சி செய்கிறார் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி: கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நீங்கள் எப்பொழுது செல்லப் போகின்றீர்கள்?
பதில்: கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு ஏற்கனவே அமைச்சர் பலமுறை  சென்று வந்திருக்கின்றார். அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுகுறித்த அறிக்கைகளை எனக்கு அளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
கேள்வி: கோதாவரி - காவிரி இணைப்பு குறித்து தெலுங்கானாவின் கவர்னர்  தமிழிசை சௌந்தர்ராஜனிடம் ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா?
பதில்: இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இது குறித்து மத்திய அரசால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு நீரை கொடுப்பதற்கு மத்திய அரசின் மூலம்  அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: விக்ரவாண்டி, நாங்குநேரி இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு உண்டான களச்சூழல் எவ்வாறு உள்ளது? அங்கு நிச்சயமாக பணம் தான் வெல்லும் என்ற ஒரு கருத்தை எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே?
பதில்: அப்படி என்றால் அவர் பணம் கொடுப்பார் என்றுதான் அர்த்தம். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அவர் பணம் கொடுத்து வெற்றி பெறுவதற்கான முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதுபோல்தான் வேலூர் தேர்தலின்போது தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வருமான வரித்துறை அவர்களுக்கு வேண்டியவர்கள் வீட்டில் சோதனையிட்டு பணம் பறிமுதல் செய்ததை ஊடகத்தின் வாயிலாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் பார்த்தோம். எனவே அவர் அந்த நினைப்பில் இருப்பார். அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி தேர்தலில் மக்களின் செல்வாக்கோடு நாங்கள் வெற்றி பெறுவோம். இரு தொகுதிகளிலும் நிச்சயமாக நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
கேள்வி: தி.மு.க.  ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு 20 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஸ்டாலின் சொல்லியிருக்கின்றாரே?
பதில்: ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கின்றது. ஏற்கனவே உள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். இப்பொழுது எதுவும் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை.
கேள்வி: மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்கு மீண்டும் மத்திய அரசை அணுகி இருக்கின்றார்களே?
பதில்: மேகதாதுவின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று ஏற்கனவே நாம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்து வழக்கு நிலுவையில் இருக்கின்றது. ஏற்கனவே மேகதாது அணை கட்டக்கூடாது என்று வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் மற்றும் பாரதப் பிரதமர் ஆகியோருக்கு கடிதங்கள் வாயிலாகவும் நேரிலும் கோரிக்கை வைத்துள்ளேன். அவருக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.  அந்த அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், 19.07.2019 அன்று கர்நாடக அரசுக்கு மேகதாது அணை கட்ட அனுமதி மறுத்துள்ளது என்பதை இந்த நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கேள்வி: 46 நபர்கள் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டிருக்கிறதே?
பதில்: அது நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அதில் தலையிட இயலாது.
கேள்வி: தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் மீண்டும் இருப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதில்: டெங்கு பிரச்சனை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல, அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள சிங்கப்பூரிலும் உள்ளது என்பதை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் வாயிலாகத் தெரிந்து கொண்டோம். இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து