கிண்டி முதல் மாமல்லபுரம் வரை சீன அதிபருக்கு வழிநெடுகிலும் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு - 35 இடங்களில் நடனம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      தமிழகம்
china president 2019 10 09

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் வழியிலும் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையிலும் சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு 35 இடங்களில் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை (11-ம் தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடியும் அன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் பின்னர் சீன அதிபர் கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார். 11-ம் தேதி பிற்பகலில் 2 தலைவர்களும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகிய இடங்களை முதலில் பார்வையிடுகிறார்கள். அப்போது இருவரும் ஒன்றாக புகைப்படங்களும் எடுத்துக் கொள்கிறார்கள்.

பின்னர் மாலையில் கடற்கரை கோவில் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். கடற்கரை கோவிலின் பின்னணியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடன நாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக மாமல்லபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபரின் வருகைக்கு இன்று ஒருநாள் மட்டுமே இருப்பதால், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிண்டியில் இருந்து மாமல்லபுரத்துக்கு சுமார் 50 கி.மீ. தூரம் காரிலேயே சீன அதிபர் பயணம் செய்கிறார். இதற்காக அவர் செல்லும் சாலைகளில் வழி நெடுக போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சீன அதிபரின் பாதுகாப்புக்காக தனித்தனியே போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. சீன அதிபர் ஒருவர் சென்னைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் வந்து இறங்கியதும் சுமார் 7 ஆயிரம் பேர் திரண்டு அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் வழியிலும் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையிலும் சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு 35 இடங்களில் சீன அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் வாழை மரம் மற்றும் தோரணங்களும் கட்டப்படுகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார். அப்போது விமான நிலைய வளாகத்துக்குள் கரகாட்டம், ஓயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதை சீன அதிபர் நடந்து சென்று பார்த்து ரசிக்கிறார். விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழிநெடுக 6 ஆயிரத்து 800 கல்லூரி மாணவ, மாணவிகள், சுய உதவிக் குழுவினர் மற்றும் அ.தி.மு.க.வினர் தேசிய கொடியை ஏந்தி வரவேற்பு அளிக்கிறார்கள். கேரள செண்டை மேளம், கோவை டிரம்ஸ், வட இந்தியாவில் புகழ்பெற்ற நாசிக் டோல் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் முன்பு வாழை மற்றும் கரும்புகளால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகிறது. ஓட்டல் வாசலில் தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வர இசையுடன் சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டம், டிரம்ஸ் வாத்தியம், காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம், ஓயிலாட்டம், மத்திய கலாஷ் அருகே மதுரை கரகாட்ட குழுவினரின் ஆடல் நிகழ்ச்சி. திருவான்மியூர் சிக்னல் அருகே செண்டை மேளம் ஆகியவை இசைக்கப்படுகிறது. கந்தன்சாவடியில் பேண்டு வாத்தியக்குழுவினரின் நிகழ்ச்சி, புலி ஆட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதை போல் வழிநெடுக வரவேற்பு வளைவுகள், பேனர்கள் வைத்து சீன அதிபரை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடிக்கும், சீன அதிபருக்கும் திருவிடந்தையில் இருந்து ஒன்றாக வரவேற்பு கொடுக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாமல்லபுரம் நுழைவு வாயிலில் பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் அமைக்கப்படுகின்றன. அர்ஜூனன்தபசு பகுதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், ஐந்துரத சாலையில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளும், கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் மலர்களால் அலங்கார வளைவுகளும் அமைக்கப்படுகிறது. சீன அதிபர் தமிழகத்தின் பெருமைகளையும், கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இது போன்ற கலைநிகழ்ச்சிகளும், வரவேற்புகளும் கொடுக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியினரும், அ.தி.மு.க.வினரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நேற்று மத்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அர்ஜூனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் ஆய்வு செய்தனர். உரிய ஆவணங்களின்றி சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த 2 திபெத்தியர்களை பிடித்து போலீசார் நேற்று விசாரித்தனர். ஏற்கனவே சில திபெத்தியர்கள் பிடிபட்டது நினைவிருக்கலாம். 

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து