விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க அரசாணை : தமிழக அரசு பிறப்பித்தது

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      தமிழகம்
tn government 2019 06 22

சென்னை : விருதுநகர், ராமநாதபுரம் திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை அமைக்க தலா ரூ. 325 கோடி நிதி ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை வருமாறு:-

 தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கல்லூரி அமைக்கும் கொள்கை முடிவை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது 20 மாவட்டங்களில் 24 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. தற்போது திருவள்ளூர்,ராமநாதபுரம் நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல்,நாகப்பட்டினம் திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகியவை அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களாகும். மத்திய அரசின் பொருளாதார பிரச்னைகளுக்கான கமிட்டி நாடு முழுவதும் 75 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை உருவாக்குவதற்காக தலா ரூ.325 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கு 60 - 40 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் விருதுநகர் ராமநாதபுரம் நீலகிரி, திண்டுக்கல் நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க தலா ரூ. 325 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக தலா ரூ.195 கோடி வழங்கப்படும். மாநில அரசின் பங்காக ரூ.130 கோடி வழங்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க நடப்பாண்டில் 2019 - 20 ம் ஆண்டிலேயே அமைக்க ரூ.100 கோடி முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 - 20 ம் ஆண்டில் ரூ.380 கோடி, 2020 - 21 ம் ஆண்டில் ரூ.418 கோடி நிதி, 2021-22 ம் ஆண்டில் ரூ. 459.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கல்லூரிகளில் தலா 100 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்கள் அனுமதிக்கப்படும். மேலும் 50 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்களை மாநில அரசுகள் தங்களது சொந்த வருவாயில் உருவாக்கி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து