தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு?

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      இந்தியா
supreme court 2019 05 07

புது டெல்லி : தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி தி.மு.க. சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது, தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்க வேண்டிய பணிகள் மட்டுமே மீதமுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யவில்லை என்று சுப்ரீம் கோர்ட் கருதினால், அந்த மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் வாதிட்டது. இதற்கும் தி.மு.க. தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா? என்று மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க கூறி விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களை தவிர பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து