ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறப்பு - விண்ணை எட்டியது பக்தர்களின் ரெங்கா, ரெங்கா கோஷம்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2020      ஆன்மிகம்
Srirangam Renganathar Paramapatha vasal 2020 01 06

திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் நேற்று திறக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த  26ம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 27-ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, நேற்று காலை 4.45 மணிக்கு நடந்தது.

இதற்காக   அதிகாலை, 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட, பல்வேறு சிறப்பு ஆபரணங்கள் அணிந்து, மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார் நம் பெருமாள்.

பின் இரண்டாம் பிரகாரம் வலம் வந்து, நாழிகோட்டான் வாசல் வழியாக, மூன்றாம் பிரகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக, பரமபதவாசல் பகுதிக்கு வந்து, காலை சரியாக, 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய ரெங்கா, ரெங்கா கோஷம் விண்ணை தொட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபத வாசலைக் கடந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளி மாலை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

பின் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக, ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு வந்த நம்பெருமாள், அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர். பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு, ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு, 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக பகல்பத்து உற்சவத்தின் கடைசிநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில் மாலை வரை இருந்தார். மாலை, 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பின் இரவு, 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

பரமபத வாசல் திறப்புக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா, ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து