ஷெல்டன் காட்ரெல் விளாசிய சிக்ஸரால் மே. இந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி - கிரெனடா நகரில் இன்று கடைசி ஆட்டம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2020      விளையாட்டு
WI win 2020 01 11

பார்படாஸ் : அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கடைசி கட்டத்தில் ஷெல்டன் காட்ரெல் விளாசிய சிக்ஸரால் மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு பந்து மீதம் வைத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பார்படாஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த அயர்லாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டிர்லிங் 63, சிமி சிங் 34, கெவின் ஓ’பிரையன் 31 ரன்கள் சேர்த்தனர். மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் அல்ஸாரி ஜோசப் 4, ஷெல்டன் காட்ரெல் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

238 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 39 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. ஷாய் ஹோப் 25, எவின் லீவிஸ்7, சிம்ரன் ஹெட்மையர் 6, பிரண்டன் கிங் 0, நிக்கோலஸ் பூரன் 52, கேப்டன் கெய்ரன் பொலார்டு 40, ஷெப்பர்ட் 8, ஹாரி பியரே 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் பின்னர் பின்கள வரிசையில் ஹைடன் வால்ஷ், அல்ஸாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல் ஆகியோர் அபாரமான பங்களிப்பை வழங்கியதால் வெற்றி பாதைக்கு திரும்பியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மார்க் அடேர் வீசிய 48-வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகள் வீசிய அல்ஸாரி ஜோசப் (16) அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் பரபரப்பு அதிகமானது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க 12 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் மெக்பிரைன் வீசிய 49-வது ஓவரில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. மார்க் அடேர் வீசிய கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் சேர்க்கப்பட்டது. 5-வது பந்தை ஷெல்டன் காட்ரெல் கவர் திசையை நோக்கி சிக்ஸருக்கு பறக்கவிட மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 49.5 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹைடன் வால்ஷ் 46, ஷெல்டன் காட்ரெல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-0 என தன் வசப்படுத்தியது. முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஆட்டம் இன்று கிரெனடா நகரில் நடைபெறுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து