உலகக்கோப்பை அரையிறுதியில் ரன் அவுட்: மவுனம் கலைத்த டோனி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2020      விளையாட்டு
dhoni runout 2020 01 12

மும்பை : உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் முக்கியக் கட்டத்தில் டோனி ரன் அவுட் ஆனது இந்திய அணிக்கு இருதயம் உடையும் தோல்வியை பெற்றுத் தந்தது, அதோடு அந்தப் போட்டிக்குப் பிறகு நீண்ட ஓய்வில் இருக்கிறார் டோனி. ஆகவே ரசிகர்களுக்கு இரட்டை மனத்தாங்கல் ஏற்பட்டது, அரையிறுதியிலும் தோல்வி, அதன் பிறகு இந்திய அணியில் தோனியையும் பார்க்க முடியவில்லை. அன்றைய தினத்தில் பொதுவாக மிக வேகமாக ஓடி ஒன்றை இரண்டாக்குவதில் அதிவல்லவரான டோனி ரன் அவுட் ஆனது  பலருக்கும் அதிர்ச்சியளிக்க அவருக்கே கூட அது பெரிய வருத்தத்தை அளித்தது என்பதே டோனியின் இப்போதைய பேட்டி வெளிப்படுத்துவதாகும். ஏனெனில் டோனி ரன் அவுட் என்பது அரிதான நிகழ்வு. அந்த அரையிறுதிப்போட்டியில் டாப் ஆர்டர் வீழ்ச்சியடைய தோனி (50), ஜடேஜா (77) இணைந்து 7-வது விக்கெட்டுக்காக 116 ரன்களைச் சேர்த்து நியூஸிலாந்து அணிக்கு வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் டோனி ரன் அவுட் ஆனார். மார்டின் கப்தில் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார் டோனி, ஸ்டேடியமே கல்லாய்ச் சமைந்தது. 2 ஓவர்களில் 31 ரன்கள் வெற்றிக்குத் தேவை இது டோனிக்கெல்லாம் பெரிய பிரச்சினையில்லைதான். 49-வது ஓவரை லாக்கி பெர்கூசன் வீச பெரிய சிக்சரை விளாசினார் டோனி அரைசதம் கண்டார். அடுத்த பந்து டாட் பால். அடுத்த பந்தில் டாட் பாலை ஈடுகட்டும் விதமாக 2 ரன்களுக்கு ஓடினார் டோனி. ஆனால் மார்டின் கப்திலின் அபார த்ரோ டோனியை முடித்தது. அதோடு இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது. டோனியே அன்று மிகவும் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி நடந்து வந்ததைப் பார்க்க முடிந்தது. சமீபத்தில் டோனி அந்தச் சமயத்தில் தன் மனதில் என்ன ஓடியது என்பதை வெளிப்படுத்தினார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

என் முதல் போட்டியில் ரன் அவுட் ஆனேன். இந்தப் போட்டியிலும் ரன் அவுட் ஆனேன். அவுட் ஆனவுடன் எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டதென்னவெனில் நான் ஏன் டைவ் அடித்து ரீச் செய்திருக்கக் கூடாது என்பதே. அந்த 2 இன்ச்கள் இடைவெளி. நான் ஏன் டைவ் அடிக்கவில்லை, நிச்சயமாக நான் டைவ் அடித்து ரீச் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 18 ரன்களில் இந்திய அணி தோல்வி அடைந்ததை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து