முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறான செய்தியை நம்ப வேண்டாம்! தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையின மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை - குடியுரிமை சட்டம் குறித்து ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சேலம் : குடியுரிமை சட்டம் குறித்த அவதூறான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையினரும் அச்சப்பட தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஓமலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

அனைத்து ஊடக நண்பர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். சேலம் மாவட்டத்தில்  அ.தி.மு.க. சார்பாகவும், கூட்டணியின் சார்பாகவும் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், அனைவரும் என்னை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். அ.தி.மு.க  அரசு சிறப்பான முறையில் செயல்படுவதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அவை வருமாறு:-

கேள்வி:- மத்திய அரசு பல்வேறு விருதுகளை கொடுத்திருக்கிறது, ஆனால் பொன் ராதாகிருஷ்ணன் பயங்கரவாதிகளின் கூடாரமாக தமிழகம் மாறியிருக்கிறது என்று மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாரே?
பதில்:- ஊடகத்தின் வாயிலாக எங்களுடைய  மீன்வளத் துறை அமைச்சர்  அழகாக பதில் சொல்லியிருக்கின்றார்.
கேள்வி:- அது குறித்து முதலமைச்சரின் கருத்து என்ன?
பதில்:-  அதுதான் என்னுடைய கருத்து.
கேள்வி:- தீவிரவாதிகள் ஊடுருவல் இப்பொழுது அதிகமாகியிருக்கிறது, குறிப்பாக, நெல்சன் சுட்டுக் கொல்லப்பட்டது, அதே போல எல்லைகளை பாதுகாக்க எதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?
பதில்:-  எல்லைகளில் எல்லாம், கடல் வழியாகவும், தரை வழியாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்றைக்கு தமிழகம் ஒரு அமைதிப் பூங்காவாக நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை சிலர் சீரழிக்க முயற்சிக்கின்றார்கள், அதை அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஒடுக்கி, தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
கேள்வி:- தலைவர் தேர்தலில் பல்வேறு முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிக் கொண்டிருக்கிறாரே?
பதில்:-  எந்த இடத்தில் சேலம் மாவட்டத்தில் தவறு நடந்திருக்கிறது? இந்த மாவட்டத்தில் எந்தவித தவறும் நடக்கவில்லை. உதாரணத்திற்கு நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்ட 2 கவுன்சிலர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். ஒரு கவுன்சிலர் 11 வாக்குகள் வித்தியாசத்திலும், இன்னொருவர் 17 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். எங்களுடைய மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சேலம் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதேபோல ஆத்தூர் மாவட்ட கவுன்சிலராக போட்டியிட்டவரும் வெகு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்காடு ஒன்றியத்தில் போட்டியிட்ட மாவட்ட கவுன்சிலரும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆகவே, இந்தத் தேர்தல் நியாயமாக, முறையாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டிருக்கின்றது. அதுவும், தேர்தல் அதிகாரிகள்தான் வாக்கு மையங்களில் வாக்குகளை எண்ணுகின்றார்கள், அங்கு பலத்த பாதுகாப்பை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருக்கின்றது. தடுப்பு அமைக்கப்பட்டு தடுப்புக்கு வெளியிலே தான் எல்லா முகவர்களும் இருந்து வாக்குச் சீட்டுகளைப் பார்த்து  எந்தெந்த வாக்குகள் யார், யாருக்கு விழுந்திருக்கிறது என்ற அந்த விவரத்தைக் காட்டி, அதிகாரிகள் அந்தந்த பெட்டிகளில் போடுகின்றார்கள். ஆகவே, இதில் எந்தவித முறைகேடு நடைபெறுவதற்கும் வாய்ப்பில்லை. ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் வேண்டுமென்றே திட்டமிட்டு, அவர்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட்டார்கள். காலையில் 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. அதுவும் நின்றுகொண்டே, அரசு அதிகாரிகள் வாக்குகளை முறையாக எண்ணினார்கள். முகவர்கள் ஏதாவது சந்தேகத்தை எழுப்பினால், அதற்கு தீர்வு கண்ட பிறகு தான் அந்தந்த வாக்குப் பெட்டிகளில் அந்த வாக்கை அளிக்கிறார்கள். அப்படி இருக்கின்ற காரணத்தினால்தான், காலதாமதம் ஏற்பட்டது. இதில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை, எந்த இடத்திலும் அப்படிப்பட்ட தவறு நடைபெற்றதாக செய்தி வரவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களும் இப்படி பரப்பி வருகிறார்கள். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க. பெரிய வெற்றியைக் கண்டிருக்கின்றது.

கேள்வி:- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் பி.ஏ. மரணம் தொடர்பாக சிபிஐ, தமிழக காவல் துறையிடம் விளக்கம் கேட்டிருக்கிறது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை அறிக்கை கிடைத்த பின்புதான் அதற்கு பதில் சொல்ல முடியும்.
கேள்வி:- தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து?
பதில்:- தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் மண்ணிலே பிறந்த எந்த சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பிற்குள்ளாக  மாட்டார்கள், இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமரும் தெளிவுபடுத்தியிருக்கிறார். வேண்டுமென்றே சில எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசியல் லாபத்திற்காக அவதூறான செய்தியை, இன்றைக்கு சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையிலே இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டு, அதனால் சிறுபான்மையின மக்கள் அச்சப்பட்டிருக்கின்றார்கள்.  இது குறித்து விளக்கமாக, தெளிவாக சட்டமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் வாழ்கின்ற எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை, அவதூறான செய்தியை நம்ப வேண்டியதில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்த ஒரு சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்று சட்டமன்றத்திலேயே எங்களுடைய கழகத்தின் சார்பாகவும், அதேபோல அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெளிவுபடுத்தியிருக்கின்றார். நானும் சட்டமன்றத்திலே தெளிவுபடுத்தியிருக்கிறேன். இதை வேண்டுமென்றே ஊடக நண்பர்களும், பத்திரிகை நண்பர்களும் கேள்வி கேட்பது, பத்திரிகையில் வெளிவருவது, எதிர்க்கட்சிகள் பேசுவது, இது தேவையற்ற ஒரு பதற்றத்தை உண்டாக்குகின்ற செயலாகத்தான் நான் கருதுகின்றேனே தவிர, தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும், எந்த சிறுபான்மையின மக்களும் குறிப்பாக இஸ்லாமியர்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.
கேள்வி:- தமிழகத்தில் அமலுக்கு வந்துவிட்டதா?
பதில்:- இல்லை.
கேள்வி:- மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பயன்பாடு குறித்து நாடாளுமன்றக்குழு இந்த பொங்கல் நாளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்களே, அது பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்:- இதுபோன்று எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து