தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனுக்கு நினைவு மண்டபம் - படத்திறப்பு விழாவில் துணை முதல்வர் உறுதி

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      தமிழகம்
O Panneer Selvam 2020 01 20

நெல்லை : தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனுக்கு சேரன்மகாதேவியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அவரது படத்திறப்பு விழாவில் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் பி.எச். பாண்டியன் படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. படத்தைத் திறந்து வைத்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:

தர்மத்தின்பால் நின்று பணிகளை ஆற்றியவர் பி.எச் பாண்டியன். அ.தி.மு.க.வுக்கு சோதனைகள் வந்தபோதெல்லாம் தனது சட்ட நுணுக்கங்கள் மூலம் அவற்றை வென்று காட்ட உதவிபுரிந்தார். சட்டசபைக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதை நிரூபித்தவர். இதற்காக சட்டசபை சபாநாயகர்கள் மாநாட்டில் பாராட்டப்பட்டிருக்கிறார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற குழுத் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். சேரன்மகாதேவியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் அவரது பெருமை பரவியிருக்கிறது. கருப்பசாமிபாண்டியன் வேற்று முகாமில் இருந்த போது எனக்கிருந்த மனக்கவலை இப்போது இல்லை. அவர் இணைந்திருப்பது போல் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வரவேண்டும். தொண்டர்களால் நடத்தப்படும் அ.தி.மு.க.வின் தூண்களில் ஒருவராக பி.எச். பாண்டியன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க. ஒரு குடும்பத்திடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தார். அவருக்கு சேரன்மகாதேவியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். அதை நானே முன்னிட்டு கட்டி முடிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசும் போது, பதவி போனால் பலர் கட்சி தலைமையை விமர்சிப்பார்கள். அவ்வாறில்லாமல் தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்கு விசுவாசமாக பி.எச்.பாண்டியன் இருந்தார். கல்வியை வியாபாரமாக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்று குறிப்பிட்டார். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும் போது, சட்ட நுணுக்கங்கள் மூலம் சாமானியர்களுக்கு பாதுகாப்பை வழங்க முடியும் என்பதை பி.எச். பாண்டியன் செயல்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் புதியபுதிய செய்திகளை அவர் சொல்வார். சட்டப் பேரவை தலைவருக்குள்ள அதிகாரத்தை அவர் நிரூபித்திருக்கிறார் என்று தெரிவித்தார். தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும் போது, மக்களின் அன்பைப் பெற்ற பி.எச். பாண்டியன், எங்களைப் போன்றவர்கள் தேர்தலை சந்திக்க முன்மாதிரியாக இருந்தார் என்று குறிப்பிட்டார். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி ஆகியோர் பேசும்போது, சட்டசபை சபாநாயகர் பதவிக்கு பெருமை சேர்ந்த பி.எச்.பாண்டியனை போல் அ.தி.மு.க.வுக்கு தொண்டர்கள் அனைவரும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் முருகையாபாண்டியன், அ.தி.மு.க. முன்னாள் அமைப்பு செயலாளர் வீ. கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்திப் பேசினர். பி.எச்.பாண்டியனின் மகனும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான பால் மனோஜ்பாண்டியன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனோகரன், வி.நாராயணன், ஐ.எஸ். இன்பதுரை, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், சின்னப்பன், சரவணன், மாணிக்கம், எஸ்.பி. சண்முகநாதன், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கணேசராஜா, கே.ஆர்.பி. பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. பேராயர் கிறிஸ்துதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் இதில் நெல்லை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர்.பி. பிரபாகரன்,மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா,  முத்துகருப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து