ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 10 விக்கெட்டு வித்தியாசத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

செவ்வாய்க்கிழமை, 21 ஜனவரி 2020      விளையாட்டு
Junior World Cup 2020 01 21

புளோம்பாண்டீன் : ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுக அணியான ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. புளோம்பாண்டீனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, அறிமுக அணியான ஜப்பானுடன் மோதியது. பகல் 1.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த ஜப்பான் அணி 22.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 41 ரன்களில் சுருண்டது.ஜூனியர் உலககோப்பை கிரிக்கெட்டில் இரண்டாவது மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இந்திய அணியில் அதிகபட்சமாக ரவி பிஷ்னோய் 4 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 4.5 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது ஜூனியர் உலககோப்பை போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து