இந்தியா மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி

புதன்கிழமை, 22 ஜனவரி 2020      இந்தியா
Rajnath Singh 2020 01 22

புது டெல்லி : இந்தியப் பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் துணிவு கிடையாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது,

இந்தியா மதசார்பற்ற நாடு தான். ஆனால் அண்டை நாடுகள் பலவும் தங்களை குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த நாடுகள் என வெளிப்படையாக அறிவித்துள்ளன. ஏன் அமெரிக்கா கூட  மதசார்பு உள்ள நாடு தான். ஆனால் இந்தியா இதுவரை மதசார்புடைய நாடாக அறிவிக்கப்படவில்லை. அதற்கு காரணம் நாம் நாட்டில் வாழ்ந்த ஞானிகளும், மகான்களும் நம் எல்லை பகுதியில் வாழும் மக்களை மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும்  மக்களை ஒரே குடும்பமாக கருதினர் என்று தெரிவித்தார்.

சீன ராணுவத்தினரால் பிரச்னைகளை சந்தித்து வருவதாக அந்நாட்டையொட்டிய எல்லைப் பகுதியில்  வசிக்கும் மக்கள் தெரிவித்து வருவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லையில் பிரச்னை ஏற்பட்டால் பாதுகாப்புப் படை வீரர்கள்  அதை கவனித்து கொள்வார்கள். ஆதலால் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 10 வயது சிறார்கள் இடையேயும் தீவிரவாத கருத்துகள் பரப்பப்படுவது கவலையளிப்பதாக முப்படை தலைமை தளபதி  பிபின் ராவத் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, அங்குள்ள சிறார்களும் நமது நாட்டினர்தான், அவர்களை எதிர்மறை கண்ணோட்டத்தில் காண  வேண்டாம். குழந்தைகளை தவறான திசையில் வழிநடத்துபவர்கள் தான் குற்றவாளிகள். சிறார்கள் அல்ல என்று ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார். சில நேரங்களில் மக்கள் அவர்களை சரியான முறையில் ஊக்குவிப்பதில்லை, அவர்கள் தவறான திசையில் வழிநடத்துகிறார்கள். தவறான திசையில்  அவர்களை ஊக்குவிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.  இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து