உள்நாட்டு போரில் மாயமானவர்கள் குறித்து விசாரணை நடத்த அதிபர் விரும்புகிறார்: இலங்கை அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      உலகம்
Gotabhaya Rajapaksa 2020 01 24

உள்நாட்டு போரில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கே இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச விரும்புவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தப் போரில் காணாமல் போன அத்தனை பேரும் இறந்து விட்டதாக அதிபர் தெரிவித்தது சர்ச்சையான நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த போர், கடந்த 2009-ம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்த போரின் முடிவில் விடுதலைப் புலிகளும், அதன் தலைவரான பிரபாகரனும் கொல்லப்பட்டு விட்டதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. இதனிடையே, இந்தப் போரில்விடுதலைப் புலிகளுடன் சேர்த்து ஏராளமான தமிழர்களும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், 20,000 தமிழர்கள் காணாமல் போய் விட்டதாகவும் அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வந்தது. இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு பிரதிநிதி ஒருவர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவை கடந்த வாரம் சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை உள்நாட்டு போரில் காணாமல் போன அனைவரும் உயிரிழந்து விட்டதாக அதிபர் ராஜபட்ச தெரிவித்ததாக பத்திரிகைகளில் அண்மையில் செய்திகள் வெளியாகின. அதிபரின் இந்தக் கருத்து இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அதிபர்அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கை உள்நாட்டு போரில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள விரும்புவதாகவே ஐ.நா. பிரதிநிதியிடம் அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்தார். அதே சமயத்தில், உயிரிழந்தவர்களை தம்மால் எப்படி மீண்டும் கொண்டு வர முடியும் என அவர் கேள்வியெழுப்பினார். 2009-ம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், போரில் காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் வலுகட்டாயமாக அவர்களின் படையில் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. அவர்களின் உறவினர்களே இதனை தெரிவித்துள்ளார்கள். எனினும், காணாமல் போனவர்கள் பற்றிய எந்த விவரங்களும் அவர்களின் உறவினர்களுக்கு தெரியவில்லை. ஆனால், போர் நடந்த சமயத்தில் காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் உயிரிழந்து விட்டார்கள் என்பதே உண்மை. இலங்கை ராணுவத்திலும் கூட4,000 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களும் அந்தப் போரில் இறந்து விட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து