‘பாரத ரத்னா விருது பெற வேண்டும்’ - மேரிகோமின் ஆசை

திங்கட்கிழமை, 27 ஜனவரி 2020      விளையாட்டு
Mericom 2020 01 27

புதுடெல்லி : தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற வேண்டும் என்பதே எனது கனவு என இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ளார். இந்த விருதை பெறும் முதல் விளையாட்டு வீராங்கனை மேரிகோம் ஆவார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள 36 வயதான மேரிகோம் நேற்று அளித்த பேட்டியில், ‘எனக்கு வழங்கப்படும் பத்ம விபூஷண் விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற வேண்டும் என்பதே எனது கனவு. தற்போது வழங்கப்படும் பத்ம விபூஷண் விருது, இன்னும் சிறப்பாக செயல்பட்டு பாரத ரத்னா விருதை பெற முடியும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது. விளையாட்டுத்துறையில் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே பாரத ரத்னா வென்று இருக்கிறார். அந்த வரிசையில் 2-வதாக நான் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன். இப்போது எனது உடனடி இலக்கு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவது தான். அதன் பிறகே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது குறித்து சிந்திப்பேன். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றினால், நிச்சயம் பாரத ரத்னா கிடைக்கும் என்று நம்புகிறேன். பாரத ரத்னா கவுரவம், மிக உயரிய சாதனையாக இருக்கும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து