மத்திய அரசின் உட்கட்டமைப்பு பட்டியலில் தமிழகத்தில் ரூ. 8 லட்சம் கோடி செலவிலான 179 திட்டங்கள் சேர்ப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Tamil-Nadu-Assembly 2020 02 14

Source: provided

சென்னை : மத்திய அரசின் உட்கட்டமைப்பு பட்டியலில் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 179 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். பட்ஜெட்டில் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2023 தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டிருந்தார். தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023–ல் பட்டியலிடப்பட்ட பல திட்டங்கள், செயலாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே நாம் திட்டப் பட்டியலைத் தயார் செய்து வைத்திருந்ததால், சமீபத்தில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய உட்கட்டமைப்பு பட்டியலில் தமிழகத்திற்கு பயனளிக்கும் பல திட்டங்களை அதில் சேர்ப்பதற்கு உடனடியாக தெரிவிக்க முடிந்தது. அதன்படி, தமிழ்நாட்டின் 8.58 லட்சம் கோடி ரூபாய் மொத்தச் செலவிலான 179 திட்டங்கள் மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்திட்டங்கள் முழுமை பெறுவதற்கு உதவியளிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம். விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிப்பதற்காக, திட்ட தயாரிப்பு நிதியிலிருந்து இதுவரை 278.11 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது. இதன் மூலம், வெவ்வேறு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெறவும், இந்திய அரசிடமிருந்து நிதியுதவியை வாங்குவதற்கு ஏதுவாக நம்மால் உடனடியாக திட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்க முடிகின்றது.

தமிழ்நாடு, பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களை உடனடியாக செயல்படுத்தக்கூடிய திறனையும், ஆயத்த நிலையையும் கொண்டுள்ளதை நிதி நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. 2020-21 ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டத்தின் கீழ், திட்ட தயாரிப்பு நிதிக்கென 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட தனியார் நிதி நிறுவனங்களின் முதலீடுகளையும் நாம் ஈர்க்கும் நிலையில் உள்ளோம். தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதியம், தமிழ்நாடு உறைவிட நிதியம் - பகுதி-II மற்றும் தமிழ்நாடு உயிரித்தொழில்நுட்ப துணிகர முதலீடு நிதியம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறது.

மத்தியக் கிழக்கு நாடுகள், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருக்கும், ஓய்வூதிய மற்றும் அரசு நிதியங்கள் உள்ளிட்ட, முதலீட்டாளர்களிடமிருந்தும், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகத்தின் நிதி திரட்டும் முயற்சிகள் பலன் பெறும் நிலையில் உள்ளன. எட்டு பெரிய திட்டங்கள், முதலீட்டுக்கான தயார் நிலையில் உள்ளன. 2020-21 ம் ஆண்டில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம், திட்டங்களில் 2,000 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்குத் தயாராக உள்ளது. இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து