தூத்துக்குடி அருகே பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை: ரூ.49 ஆயிரம் கோடியில் குவைத் நிறுவனம் அமைக்கிறது

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
petroleum refinery plant 2020 02 14

தூத்துக்குடி அருகில் 49 ஆயிரம் கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையை குவைத் நிறுவனம் அமைக்கிறது என்றும் தொழில் துறைக்கு ஊக்கத் தொகை வழங்க ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவிலேயே முதலீடுகளை மிக அதிக அளவில் ஈர்க்கும் ஒரு மாநிலமாக தமிழகம் தொடர்ந்து விளங்கி வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகிய முதலீட்டு ஒப்பந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதில் இந்த அரசு தனிக்கவனம் செலுத்தியுள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பின்னர், முதல்வரின் நேரடி ஈடுபாட்டினாலும், இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட வெற்றிகரமான அரசுமுறை பயணத்தினாலும், பல புதிய முதலீடுகளை இம்மாநிலம் ஈர்த்துள்ளது. ஜனவரி மாதம் 2020-ம் ஆண்டில், 32,405 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், 52,075 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாளது தேதி வரையில், தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தனிப்பட்ட முதலீடாக, குவைத் நாட்டைச் சார்ந்த அல் கெப்லா அல் வட்யா குழுமம், தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகத்தை 49,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கும். இந்த முதலீடு, அதைச் சார்ந்த உப தொழில்களுக்கு குறிப்பிடத்தக்க பயன் அளிப்பதுடன், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெருமளவு வேலைவாய்ப்பினையும் உருவாக்கும். பொருட்கள் மற்றும் சேவைகள் வரி நடைமுறைக்கு தகுந்தவாறு முதலீட்டாளர்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்க, புதிய தொழில் கொள்கையை, தமிழ்நாடு அரசு விரைவில் வெளியிடும். மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் தமிழ்நாட்டை மின்சார வாகனங்கள், உதிரி பாகங்கள், மின்ஏற்று உபகரணங்கள் தயாரிப்பு மையமாக உருவாக்குதல் ஆகிய இரண்டு முக்கிய நோக்கங்களுடன், மிகவும் முற்போக்கான, தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கையை, 2019ம் ஆண்டில் அரசு வெளியிட்டது. பயிர் செய்யத் தக்க நிலங்களின் பரப்பு, தொழில் வளர்ச்சியினால் பாதிப்படையக் கூடாது என்பதனால், தொழில்துறை உபயோகத்தில் உள்ள நிலங்களின் நிலப் பயன்பாட்டை மேம்படுத்த, மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான தரைதள குறியீடு ஒன்றிலிருந்து ஒன்றரையாகவும் மற்றும் மனை பரப்பளவு 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை–பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநில அரசின் ஆதரவு வழங்கும் ஒப்பந்தத்திற்கும், பங்குதாரர்களின் ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை பொருளாதாரப் பெருவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, சென்னை–கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். காட்டுப்பாக்கம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பின்டெக் சிட்டி அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான முன்சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு, விமான நிலையத்திற்கான ஆயத்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் ஏறத்தாழ 33,775 ஏக்கர் பரப்பளவில் 23 தொழில் வளாகங்கள், 7 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கியுள்ளது. மொத்தம் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 6.48 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும், 2,631 தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 4,457 ஏக்கர் நிலம் உடனடி ஒதுக்கீட்டிற்குத் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழிற்பூங்காக்களில் தற்போது இயங்கி வரும் நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத மனைப் பரப்பை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, உள்குத்தகை கட்டணம் மற்றும் நிர்வாக மாற்ற கட்டணம் ஆகியவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 தென் மாவட்டங்கள் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 16,725 ஏக்கர் பரப்பளவில் கூடுதலாக புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் தொழிற்பூங்காவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதுமை முயற்சிகளை தொடக்க நிலையிலேயே ஊக்குவிக்க, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழான நிதியுதவியுடன், 53.44 கோடி ரூபாய் செலவில், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் தொழில் புதுமை முயற்சி மையங்களை நிறுவும் பணிகளை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் மேற்கொள்ளும். 34.81 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் வர்த்தக எளிதாக்குதல் மையம் ஒன்று சிறுசேரியில் உருவாக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தொழிற்பூங்கா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலையை, 634 கோடி ரூபாய் செலவில், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் நிறுவும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும், ஹெச்.எல்.எல் லைப் கேர் நிறுவனமும் இணைந்து 205 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டிற்கு அருகில் ஒரு மருத்துவப் பூங்காவை நிறுவிட உத்தேசித்துள்ளன. மொத்தம் 10 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய சிமெண்ட் ஆலையை அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் தொடங்கி, தற்போதைய உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கியுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான வரவு, செலவு திட்டத்தில் தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக 2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து