பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலம் தமிழகம்: அமைச்சர் துரைக்கண்ணு தகவல்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
formar 2020 02 19

பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று சட்டசபையில் அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி பேசுகையில், பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும், தனது மாவட்டத்தில் 150 கிராமங்களில் கொடுக்கப்படாததால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவித்தார். அதற்கு வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு பதில் அளிக்கையில், இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதுவரை 7 ஆயிரத்து 618 கோடி பயிர் காப்பீட்டு தொகை பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டில் 297 கோடி ஒப்பளிக்கப்பட்டது. 2018-19-ல் 159 கோடி ஒப்பளிக்கப்பட்டது. பயிர் காப்பீட்டு தொகை வழங்குவதில் விவசாயிகள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும், சில இடங்களில் வங்கி கணக்குகள் மாறி உள்ளதால், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அதை தொடர்ந்து ஓ.எஸ்.மணியன் கூறுகையில், புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் எந்த குளறுபடியும் இல்லை. நடைமுறை சிக்கல் தான் உள்ளது. தந்தை பெயரில் உள்ள சொத்தை வாரிசுகள் பகிர்ந்து கொண்டு விவசாயம் செய்கிறார்கள். பாகப் பிரிவினை செய்தது தொடர்பாக பத்திரப்பதிவு நடைபெறாமல் உள்ளது. பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டும். அப்படி பட்டா மாறுதல் செய்யததால் தடை ஏற்பட்டுள்ளது. தாசில்தாரிடம் வாரிசு சான்றிதழ் பெற்று தந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கி ஆகிய 2 இடங்களிலும் பயிர் காப்பீடு தொகை பெற சிலர் முயற்சி செய்கிறார்கள். இதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனது மாவட்டத்தில் கூட 2 ஆயிரம் ஏக்கரில் இதுபோன்ற பிரச்சினை உள்ளது என்றார்.

அதை தொடர்ந்து அமைச்சர் பாஸ்கரன் கூறும் போது, சிவகங்கை மாவட்டத்தில் 85 கிராமங்களில் பயிர் காப்பீட்டு தொகை கொடுக்க வேண்டி உள்ளது. 21-ம் தேதி இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.  அதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் போது, யாருக்கெல்லாம் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லையோ, அவர்களுக்கு எல்லாம் ஆய்வு செய்து பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து