ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம்: ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அரசு முடிவு: சட்டசபையில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Tn  Assembly 2020 02 19

அரசு இல்லங்களில் வாழும் பெண் குழந்தைகள் 21 வயது பூர்த்தியடையும் போது அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ. 2 லட்சம் செலுத்தப்படும் என்றும் ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழக சட்டசபையில் சட்டப் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
 
குழந்தைகள் மீது மிகுந்த பற்றும், மாறாத அன்பும் கொண்டு, குழந்தைகளைக் காணும்போதெல்லாம் அவர்களை உச்சி முகர்ந்து வாழ்த்தி மகிழும் தாயுள்ளம் கொண்டவர் அம்மா. குறிப்பாக, பெண் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் அம்மா.  அன்னை தெரசாவால் பாராட்டப்பட்ட தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,  அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், பெண் கல்வியை ஊக்குவிக்க, படித்த பெண்களுக்கு ஊக்கத் தொகையுடன் கூடிய தாலிக்குத் தங்கம், அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் வண்ணம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைத்தல் போன்ற புதுமையான திட்டங்கள் அம்மாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அம்மாவின் அரசால் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்காக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக அம்மா ஆற்றிய உயர்ந்த சேவையினை நினைவு கூரத்தக்க வகையில், அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதியை, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைப்பிடிக்க அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.  அம்மாவின் நினைவினை சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்விற்கான ஐந்து புதிய திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்த உள்ளது. 

அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும் போது, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் அவர்களது பெயரில் வங்கியில் செலுத்தப்படும்.  அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்துக் கொள்ள இத்தொகை ஏதுவாக அமையும்.   பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து, அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படுமானால் அம்மாவின் அரசு, தாய் தந்தை நிலையிலிருந்து அவர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும்.  இந்த உதவித் தொகுப்பில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்தல் போன்றவை அடங்கும்.  அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இவ்வுதவி வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஆதரவற்ற மற்றும் முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு, தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.  இத்தொகை, மாதம் 4,000 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும். 

பெண் சிசு கொலைகளை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டத்தினை நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்  அம்மா. தமிழ்நாட்டில், பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. அதனை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் மூன்று மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும். சமூக பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள் மற்றும் மகளிர் காப்பகங்களில் உள்ள இல்லவாசிகளுக்கும், காப்பகங்களில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறிய இல்லவாசிகளுக்கும், சமூக பாதுகாப்புத் துறையில் சி மற்றும் டி பிரிவில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத காலி பணியிடங்களில் பணியமர்த்த தற்போது அரசாணை உள்ளது. அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள, முற்றிலும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் கீழ் இயங்கும், சமூக நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்கு உட்படாத சி மற்றும் டி பிரிவு பணியிடங்களில், வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.  இதைத் தவிர, சத்துணவு திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கு ஏற்ப, முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். 

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பாக பின்வரும் அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள வக்பு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று வறிய நிலையில் உள்ள பேஷ் இமாம், மோதினார், அரபி ஆசிரியர் மற்றும் முஜாவர் ஆகிய உலமாக்களுக்கு தற்போது 1,500/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.  உலமாக்களுக்கு வழங்கப்படும் இந்த மாதாந்திர ஓய்வூதியத் தொகை 1,500/- ரூபாயிலிருந்து 3,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.  ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஹஜ் குழுவின் மூலம் 4,000 பயணிகள் சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.   கடந்த ஆண்டு ஹஜ் பயணத்தின் போது 4,300-க்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.  ஹஜ் பயணிகள் தங்களுடைய பயணத்திற்கு முன்பு தங்கி கடவுச்சீட்டு, பயண உடமைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை சிரமமின்றி மேற்கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் சென்னையில் ஒதுக்கீடு செய்யும் நிலத்தில் ஒரு ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபாயினை அரசு ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் கட்டப்படும்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 2,814 வக்பு நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. இந்த பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க 25,000 ரூபாய் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ, அத்தொகை மானியமாக வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து