வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை பாட்டு பாடி மகிழ்விக்கும் போலீசார்

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      உலகம்
Spain police 2020 03 24

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரோந்து சுற்றி வரும் போலீசார் பாட்டு பாடி மகிழ்விக்கின்றனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் ஸ்பெயினில் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 33 ஆயிரத்து 89 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,206 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு பொதுமக்கள் நடமாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வாகனங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரோந்து சுற்றி வரும் போலீசார் பாட்டு பாடி மகிழ்விக்கின்றனர். ஸ்பெயினில் மல்லோரியா என்ற தீவு உள்ளது. அங்கு அல்கோடியா என்ற நகரில் ரோந்து சுற்றி வரும் போலீசார் கையில் இசைக் கருவிகளை பிடித்த படி தெருக்களில் பாடல்களை பாடிக் கொண்டு வந்தனர். அதைக் கேட்ட பொதுமக்கள் வீடுகளில் இருந்தும், மாடி வீடுகளில் வாழும் மக்கள் பால்கனிகளிலும் நின்றபடி பாடல்களை கேட்டு மகிழ்ந்தனர். கைகளை தட்டி போலீசாருடன் இணைந்து பாடல்களை பாடி மகிழ்ந்தனர், கைகளை உயர்த்திய படி போலீசாருடன் சேர்ந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து