சமூக இடைவெளிதான் அவசியம்: அமைச்சரவை கூட்டத்திலும் செயல்படுத்திய பிரதமர் மோடி

புதன்கிழமை, 25 மார்ச் 2020      இந்தியா
modi 2020 03 25

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக இடைவெளிதான் முக்கியமானது, அவசியமானது என்பதை வலியுறுத்தி வரும் பிரதமர் மோடி, தனது இல்லத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூட அதைச் செயல்படுத்தினார்.

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸுக்கு இதுவரை இந்தியாவில் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 11 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் மோடி இருமுறை நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சியில் உரையாற்றும்போது, கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூகக் கட்டுப்பாடுதான் அவசியம். இடைவெளி விட்டுப் பழக வேண்டும், பேச வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தினார். இந்த சூழலில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஹர்ஷவர்த்தன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சமூக இடைவெளி அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு அமைச்சர் அமரும் இருக்கைக்கும் மற்றொரு அமைச்சர் அமரும் இருக்கைக்கும் இடையே 3 அடிக்கும் மேலாக இடைவெளி விடப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் இடைவெளி விட்டு அமர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து