முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமை கழகத்தில் விடிய விடிய நடந்த ஆலோசனை: அ.தி.மு.க. 2–வது வேட்பாளர் பட்டியல் தயார் : பா.ஜ.க., பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் என முடிவானது

புதன்கிழமை, 10 மார்ச் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அண்ணா தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் அடையாளம் காண்பது, அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு குறித்து அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அதிகாலை 4.30 மணி வரை ஆலோசனை நடந்தது.

அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் நேற்று இரவு 7 மணி முதல் இன்று அதிகாலை 4.30 மணி வரை ஆலோசனை நடத்தினார்கள்.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சிக்கு 20 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு கட்சிகளுக்கும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் அடையாளம் காணப்பட்டது.

முதலில் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமையில் வந்த குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி எந்தெந்த தொகுதிகள் என தேர்வு செய்தனர்.

இதனை அடுத்து இரவு 12 மணிக்கு மேல் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் வந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளில் எந்தெந்த தொகுதிகள் என்று தேர்வு செய்தனர்.

இந்த இரு கட்சி தலைவர்களும் பேசி முடித்து விட்டு சென்ற பின் அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

யார், யார்?

நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி எம்.பி., ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகாலை 4.30 மணி வரை நடந்த கூட்டம்

இந்த ஆலோசனை கூட்டம் விடிய விடிய இன்று அதிகாலை 4.30 மணி வரை நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து ஓரளவுக்கு முடிவு செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

அண்ணா தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 5–ந் தேதி தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அண்ணா தி.மு.க. வெளியிட்டது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்) உள்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

இதற்கிடையில் அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்லமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நேற்று இரவு 8 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் இருந்தனர்.

இதற்கிடையில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், துணைத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர், இரவு 9.10 மணிக்கு அண்ணா தி.மு.க. அலுவலகம் வந்தனர். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகிய நிலையில் அண்ணா தி.மு.க.– பா.ஜ.க. இடையே நடந்த இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

ஆலோசனையின்போது பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்கலாம்? என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியதால் விரும்பிய சில தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு பெற்றதாகவும், இதற்காக தொகுதி தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்டம் இரவு 11 மணி வரை நீடித்தது.பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த பாரதிய ஜனதா தலைவர் முருகன் கூறுகையில், நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என்று கூறினார்.

அதன்பிறகு இரவு 12.15 மணிக்கு ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க நிர்வாகிகள் அண்ணா தி.மு.க தலைமைக்கழகம் வந்தனர். நள்ளிரவு 2 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த 23 தொகுதிகளில் கேட்ட தொகுதிகள் அனைத்தும் அவர்களுக்கு கிடைத்ததால் பா.ம.க.வினர் மிகவும் மகிழ்ச்சியாக புறப்பட்டு சென்றனர்.

அதன்பிறகு அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் அமர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பட்டியலை இறுதி செய்யும் போது பக்கத்து அறையில் அமர்ந்து இருந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரையும் அழைத்து வேட்பாளர் பற்றிய விவரம் கேட்டறிந்தனர். பாரதிய ஜனதா – பா.ம.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மொத்தம் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த இடங்கள் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியை ஓரளவு முடித்தனர்.

இன்னும் த.மா.கா., புதிய நீதி கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டி உள்ளதால் அந்த கட்சிகள் போட்டியிட உள்ள இடங்களை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்தனர்.

சுமார் 185 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. போட்டியிடும் என்று தெரிகிறது. அதிகாலை 4.20 மணி வரை விடிய விடிய தலைமைக் கழகத்தில் இதற்கான ஆலோசனை நடைபெற்றது.

அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இன்று காலையில், மற்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது.

அண்ணா தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதால் இன்று 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 50-க்கும் மேற்பட்ட சிறிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

சென்னையை பொறுத்தவரை பாரதீய ஜனதாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து