முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு : 23 மாவட்டங்களில் பஸ்கள் ஓடத் தொடங்கின : பொதுமக்கள் மகிழ்ச்சி பயணம்

திங்கட்கிழமை, 28 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. அதே போல் 23 மாவட்டங்களில் பஸ்கள் ஓடத் தொடங்கின, இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி பயணம் மேற்கொண்டனர்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அடிப்படையி்ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையே பொது பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஏற்கனவே நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந்ததை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் கூடுதல் தளர்வுகளை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதனடிப்படையில் 4 மாவட்டங்களுடன் கூடுதலாக அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 27 மாவட்டங்களுக்கு நேற்று காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் மாவட்டங்களுக்கு உள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பஸ்கள் இயக்கப்பட்டன. 

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 290 பஸ்களில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2 ஆயிரத்து 200 பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 365 பஸ்களும், விழுப்புரம் கோட்டம் 2 ஆயிரத்து 210, சேலம் கோட்டம் 513, கும்பகோணம் கோட்டம் ஆயிரத்து 592, மதுரை கோட்டம் ஆயிரத்து 300, நெல்லை கோட்டம் ஆயிரத்து 153 உள்பட 9 ஆயிரத்து 333 பஸ்கள் 27 மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முக கவசம் அணிந்துவரும் பயணிகள், சமூக இடைவெளியை பின்பற்றி பஸ்களில் பாதுகாப்பான பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பஸ்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டு, அரசு பிறப்பித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்கப்படுகிறது. 

கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு நேற்று காலை 6 மணி முதல் பகல் மற்றும் இரவில் செல்லும் அரசு விரைவு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. அருகில் உள்ள மாவட்டங்களுக்கு விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட கோட்டங்கள் சார்பாகவும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளுக்கு தேவையான டிக்கெட்டுகளை பெற கவுண்ட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 

வழிபாட்டுத்தலங்கள் திறப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் அதிகாலையிலேயே கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, சானிட்டைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு பக்தர்கள் கோவில்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது, விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அர்ச்சனைக்காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை. 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். 63 நாட்களுக்கு பின் சென்னையில் உள்ள மசூதிகளில் தொழுகை நடந்தது.65 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயங்க தொடங்கிய உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்கின. 

சென்னை வடபழனி முருகன் கோவிலில், தமிழ்க்கடவுளை பயபக்தியோடு இறையன்பர்கள் வழிபட்டுச் சென்றனர்.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் கொரோனா நோய் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்டு நிரந்தரமாக கோவில்கள் திறக்க வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. ஆதி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயில், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில், நடுபழனி மரகத பால தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்டகோயில்கள் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டன. 

இதேபோல, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிவாசல்களில் தொழுகையும், தேவாலயங்களில் பிரார்த்தனையும் தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து