முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      தமிழகம்
Selvabaru 2023-02-19

Source: provided

சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின்  விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். 

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

மக்களவைத் தேர்தலின் முதல் மற்றும் இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துக்களை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். 

2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் மக்களை திசைத் திருப்புவதற்கு புல்வாமா, பாலகோட் தாக்குதலை பரப்புரையில் தவறாக பயன்படுத்தி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

தற்போது, இஸ்லாமியர்களுக்கு மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று ஆதாரமற்ற நச்சுக் கருத்தை கூறி ஒரு பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறார். 

இந்தியாவை பொறுத்தவரை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக தேர்வு செய்து அரசமைப்புச் சட்ட தயாரிப்புக்குழுவின் தலைவராக நியமித்து அவரது பரிந்துரைகளின் அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் உருவாக காரணமாக இருந்தது காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களான மகாத்மா காந்தி,  ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் உள்ளிட்ட தலைவர்கள் தான். 

அரசியல் நிர்ணய சபையில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் அரசமைப்புச் சட்டம் உருவாகியிருக்காது என்று டாக்டர் அம்பேத்கர் இறுதி உரையில் குறிப்பிட்டதை எவரும் மறுத்திட முடியாது. 

இதன்படி இந்து மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினரை அந்தந்த மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திரட்டுகிற புள்ளி விவரங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட சாதிகள் தேர்வு செய்யப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதே நடைமுறை தான் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. 

அதனடிப்படையில் தான் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்திருக்கிறது. உண்மைநிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி  பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். 

கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை.  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. 

இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே இண்டியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது.   மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின்  விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து