முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்கு ஆஜராகுவதில் பாபா ராம்தேவுக்கு விலக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : விசாரணைக்கு ஆஜராகுவதில் இருந்து பாபா ராம்தேவுக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்துவருகிறது. கடந்த மாதம் பதஞ்சலி நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என எச்சரித்த சுப்ரீம் கோர்ட், பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வழக்கு தொடர்பாக ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்த நிலையில் யோகா குரு ராம்தேவ் கடந்த 2-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜரானார். அப்போது பிரமாண பத்திரம் திருப்தி அளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.  இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை கடந்த 16-ம் தேதி மீண்டும் நடைபெற்றது. அப்போது எங்களுடைய கருத்துகள், செய்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்கவேண்டும் என பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மற்ற மருந்து முறைகளை இழிவுபடுத்த அதிகாரம் வழங்கியது யார்?, நிரூபணமற்ற அலோபதி மருந்து விளம்பரங்களை எங்காவது பார்த்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பினர்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 23-ம் தேதி நடைபெற்றபோது நாளிதழ்களில் வெளியிடப்பட்ட பொது மன்னிப்பு கோரும் விளம்பர நகலை பதஞ்சலி நிறுவன வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதனைப் பார்த்த நீதிபதிகள் மன்னிப்பு கோரும் விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்துப் பார்க்கும் அளவுக்கு சிறிதாக உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இதுபோன்ற சிறிய அளவில்தான் வெளியிடுவீர்களா? பொருளை விளம்பரப்படுத்துவது போல மன்னிப்பும் மிகப்பெரிய அளவில் புதிய விளம்பரமாக வெளியிட்டு அதை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. சுப்ரீம் கோர்ட் கண்டனத்தைத் தொடர்ந்து பதஞ்சலி நிறுவனம் செய்தித்தாள்களில் மீண்டும் பொது மன்னிப்பு கோரி விளம்பரம் செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகினர். நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்பு கேட்ட அசல் பக்கத்தை பதிவு செய்யுமாறு அவர்களது வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து அடுத்த விசாரணையின்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராவதில் இருந்து நீதிபதிகள் விலக்கு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து