முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை

வியாழக்கிழமை, 2 மே 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை :  தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவதூறு பரப்பும் வகையில் காணொலி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயிலின் அடித்தளத்தை அசைக்கும் வகையில் தரைத்தளங்களை உடைத்து இந்து சமய அறநிலையத் துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒரு காணொலி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் மத்திய அரசின் கீழ் உள்ள இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தத் திருக்கோயில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையினரால் மட்டுமே மேற்கொள்ளப்படும். இந்து சமய அறநிலையத் துறையால் தினசரி பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சன்னதியின் பின்புறத்தில் உள்ள தரைத்தளம் மேடு பள்ளங்களுடன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்கு சிரமமாக உள்ளதால் தரைத்தளத்தில் பராமரிப்பு பணிகள் இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆனால், பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.  இந்தத் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இந்திய தொல்லியல் துறையின் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்து சமய அறநிலைத் துறையின் மீது அவதூறு பரப்பும் வகையில் காணொலி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து