முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

வியாழக்கிழமை, 2 மே 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி 2ஜி வழக்கில், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றைகளை ஒதுக்க வேண்டும் எனவும் மற்றும் 2008-ம் ஆண்டு ஆ.ராசா, தொலைத்தொடர்பு துறை மத்திய அமைச்சராக இருந்த போது, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 2ஜி அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்தும் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இதனிடையே, ஏல முறையில் மட்டுமே அலைக்கற்றை விற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அப்போது வழங்கிய உத்தரவில் திருத்தம் செய்யக் கோரியும், சட்டத்தின் அடிப்படையில் நிர்வாக நடைமுறைகள் மூலம் அலைக்கற்றைகளை ஒதுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை சமீபத்தில் தாக்கல் செய்தது. மேலும் அலைக்கற்றை பயன்பாடு என்பது வணிக நோக்கில் மட்டுமல்லாமல், தேசப்பாதுகாப்பு மற்றும் இயற்கை பேரிடர் உள்ளிட்ட அம்சங்களுக்கும் தேவைப்படுகிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்யக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை, சுப்ரீம் கோர்ட் விதிகள் 2013ன் ஆணை XV விதி 5 இன் கீழ், பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் பதிவாளரின் உத்தரவில், “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஆராய்ந்ததில், விண்ணப்பதாரர் தற்போதைய விண்ணப்பத்தைத் தாக்கல் செய்கிறோம் என்ற போர்வையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறார் என்பது தெளிவாகிறது” என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கிடையே, 2ஜி வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து