முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      தமிழகம்
Selvabaru 2023-02-19

Source: provided

திருநெல்வேலி : நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நெல்லையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கே.பி.கே. ஜெயக்குமார். இவர் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்தார். இவரை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக காணவில்லை என அவரது உறவினர்கள் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்தில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜெயக்குமாரின் உடலை, உவரி போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உடல் அவரது உறவினர்களிடம் நேற்று (ஞாயிறு) காலை ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒரு நல்ல மனிதர். காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தற்போது உயிரிழந்துவிட்டார். அவரது மறைவு எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையாக காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும். எந்த கட்சியின் பின்புலத்தில் இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவரது மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், யாருடைய பெயர்கள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட காவல்துறை வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அப்படி வெளிப்படையாக விசாரணை மேற்கொண்டால்தான், ஜெயக்குமார் உயிரிழப்புக்கு யார் காரணம்? என்பது தெரியவரும். மேலும் நாங்கள் கட்சி ரீதியாகவும் இதை விசாரித்து, கட்சித் தலைமைக்கு அறிக்கை அனுப்புவோம். காவல்துறை விசாரணை என்பது தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக மற்ற தகவல்களை எங்களால் வெளியே தெரிவிக்க முடியாது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள், பணம் படைத்தவராகவோ, மிகப்பெரிய அரசியல்வாதியாகவோ இருந்தாலும்கூட அவர்கள் மீதும் காவல்துறை பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் உள்ளதாக எனது கட்சிக்காரர்கள் என்னிடம் கூறினர். அதேபோன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. எனவே இந்த மரணத்தில் பெருத்த சந்தேகம் இருக்கிறது. இதுதொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து