முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

திங்கட்கிழமை, 6 மே 2024      தமிழகம்
Plus-2 2024-05-06

Source: provided

திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 10,810 மாணவர்கள், 13,039 மாணவிகள் என மொத்தம் 23,849 பேர் எழுதினர். இந்த நிலையில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 10,440 மாணவர்கள், 12,802 மாணவிகள் என 23,242 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.45  சதவீத தேர்ச்சி ஆகும். 

இதன் மூலம் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பூர் மாவட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறந்த கல்வி அளித்த ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதே போல் அரசு பள்ளிகள் அளவிலும் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 77 அரசு பள்ளிகள் உள்ளன. இதில் 4,548 மாணவர்கள், 5,935 மாணவிகள் என மொத்தம் 10,483 பேர் எழுதினர். 

இதில் 4,274 மாணவர்கள் ,5,763 மாணவிகள் என மொத்தம் 10,037 மாண வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் 97.75 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. 

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த 2021 - 2022 ம் கல்வியாண்டில் மாநிலத்தில் 5-ம் இடம் பெற்ற திருப்பூர் மாவட்டம் கடந்த 2022 - 2023-ம் கல்வியாண்டில் 3 இடங்கள் முன்னேறி 2-ம் இடம் பெற்றது. 

 24 ஆயிரத்து 732 பேர் தேர்வு எழுதி 24 ஆயிரத்து 185 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதியவர்களில் 547 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. 97.79 தேர்ச்சி சதவீதம் பெற்று திருப்பூர் மாநிலத்தில் 2-ம் இடம் பெற்று பாராட்டுக்களை பெற்றது.

100 சதவீத தேர்ச்சி பெற வைத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முக்கிய பாடங்களில் சென்டம் பெற உதவிய வகுப்பாசிரியர் உட்பட ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை சார்பில் காங்கயத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

கடந்த ஆண்டு 2-ம் இடம் பெற்றாலும் 2019, 2020 ஆண்டுகளில் முதலிடம் பெற்று பாராட்டுகளை அள்ளிய திருப்பூர் நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் 97.45 சதவீதத்துடன் மீண்டும் முதலிடம் பெற்று புதிய சாதனையை படைத்துள்ளதாக திருப்பூர் மாவட்ட கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து