முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்

புதன்கிழமை, 8 மே 2024      தமிழகம்
CHIEF-SECRETARY-2024-05-08

சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர்கல்விக்கு வழிகாட்டும் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான கல்லூரிக் கனவு - 2024 மாவட்ட அளவிலான நிகழ்ச்சியினை தொடக்கிவைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாணவர்களுடன் பேசியதாவது., "அனைத்து மாணவர்களும் தங்களுக்கான வாய்ப்புகளை பயன்படுத்தி உயர்கல்வி தொடர வேண்டும். மாணவர்கள் நன்றாகப் படித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும். உயர்கல்வியில் சேராமல் உள்ள மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கப்படும்  என்று தெரிவித்தார்.

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயிர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து