முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

புதன்கிழமை, 8 மே 2024      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் அளிக்கப்பட்ட மனுவில், "முதுநிலை ஆசிரியர்களின் பணபலன் சார்ந்த தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துரு தயாரித்தல் மற்றும் அதுசார்ந்த அமைச்சுப்பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்துக் கொடுத்தால் மட்டுமே பெற்றுத் தரப்படுகிறது. அவ்வாறு அந்த ஆசிரியர்கள் செய்யவில்லை எனில், அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது. இந்த மன உளைச்சலைத் தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்களை கூடுதல் பணியாக அமைச்சுப்பணிகளையும் மேற்கொண்டு தங்களுக்குரிய பணபலன்களை பெறும் அவலநிலை உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆசிரியர்களை வேறு வேலைகளுக்கு பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர், அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து விதிகளுக்குட்பட்டும், தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை விதிமுறைகள்படி காலதாமதமின்றி அலுவலக தலைவரான தலைமை ஆசிரியருக்கு கோப்புகளை சமர்ப்பிக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் அவர்களின் தபால்கள் அலுவலக தலைவரான தலைமை ஆசிரியர் மூலமாக பெறப்பட்டவுடன் அவற்றை முறையாக தன்பதிவேட்டில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை தலைமை ஆசிரியர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த ஆய்வின்போது அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் விண்ணப்பம் நடவடிக்கையின்றி கிடப்பில் போடப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளியின் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பணியிடம் காலியாக இருந்தால் அருகாமையில் உள்ள பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து