முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் விற்பனையை தொடங்குகிறதா அமுல்? - வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு

புதன்கிழமை, 8 மே 2024      தமிழகம்
Amul 2024-05-08

Source: provided

சென்னை : ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அமுல் பால் விற்பனையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. அடுத்த 2 மாதங்களில் அமுல் நிறுவனம் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் அமுல் நிறுவனம் தற்போது வரை பால் பண்ணையை அமைக்கவில்லை என்று பால்வளத்துறை கூறியுள்ளது.

தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் வாயிலாக, பால் மட்டுமின்றி, 230க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, குஜராத் மாநில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல் வாயிலாகவும், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி, அமுல் நிறுவனத்தின் பால் பொருட்கள் தமிழகம் முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், ஒரு மாநில பால் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு போட்டியாக, மற்றொரு மாநில பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது இல்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் பாக்கெட் தொழிற்சாலையை அமுல் நிறுவனம் அமைத்து வருகிறது. இங்கிருந்து பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களை, தமிழகம் முழுதும் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள், 2023ல் துவங்கின.

இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், பால் கொள்முதலை அமுல் நிறுவனம் துவங்கவில்லை. ஆனாலும், கிருஷ்ணகிரியில் பால் பண்ணை கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, ஆவினுக்கு போட்டியாக தயிர், பனீர், யோகர்ட், லஸ்ஸி விற்பனையை அமுல் நிறுவனம், ‘டீலர்’கள் வாயிலாக துவங்கியுள்ளது என்று தகவல் வெளியானது.

இதற்கான கிடங்கு, செங்குன்றம் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டு மாதங்களில் சித்துார் பால் பண்ணையில் இருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், பால் விற்பனையை துவங்குவதற்கு அமுல் முடிவெடுத்துள்ளது என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக அமுல் பால் விற்பனை தொடங்க உள்ளதாக வெளியான தகவலுக்கு பால்வளத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அமுல் நிறுவனம் தற்போது வரை பால் பண்ணையை அமைக்கவில்லை என்றும் அமுல் நிறுவனம் பால் விற்பனையை தற்போது வரை தமிழகத்தில் தொடங்கவில்லை என்றும் பால்வளத்துறை கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து