முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள்: மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சிக்கு தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நிதிக்குழுவுக்கு தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

16-வது நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது., அண்மையில், பொருளாதார வல்லுநர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்குழுவின் கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. பல்வேறு துறைசார் நிபுணர்களைக் கொண்ட இந்த குழு இந்தியா எதிர்கொண்டு வரும் பொருளாதாரச் சிக்கல்கள், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளில் உள்ள சமச்சீரற்ற தன்மை ஆகியவற்றை சரிசெய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிதிக்குழு எடுக்க உள்ள முடிவுகள், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிதிச் செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுப்பது மட்டுமின்றி, எதிர்வரும் காலங்களில் இந்தியா தேர்வு செய்யப்போகும் பொருளாதாரப் பாதையின் மீதும் தாக்கம் செலுத்தக் கூடியவையாகும். உலக அளவில் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்து வரும் இவ்வேளையில், 16-வது நிதிக்குழு தனது பணியை மேற்கொண்டுள்ளது.

15-வது நிதிக்குழு மாநிலங்களுக்கு 41% வரிப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையிலும், முதல் நான்காண்டுகளுக்கு மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது. எதிர்பாராத விதமாக வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியதே பகிர்வில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகும்.

மாநிலங்கள் மக்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் அதேவேளையில், அவற்றிற்கான மத்திய நிதியும் அதற்கேற்றவாறு உயர்த்தப்பட வேண்டும். மத்திய திட்டங்களுக்குச் செலவாகும் கூடுதல் நிதி மற்றும் மத்திய அரசின் குறைந்த நிதிப்பகிர்வு ஆகிய இரண்டு காரணங்களும் மாநிலங்கள் மீதான நிதிச்சுமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. எனவேதான், மத்திய வரிவருவாயில் இருந்து மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். இது மாநிலங்கள் நிதி சுயாட்சியுடன் செயல்படவும், மாநில மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்தவும் உதவும்.

சமச்சீரான அணுகுமுறையே பெரிய அளவிலான தேசிய பொருளாதார வளங்களுடன், வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களுக்குத் தேவையான பகிர்வை அளிக்கவும், முன்னேற்றப் பாதையில் இருக்கும் மாநிலங்களின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கத் தேவையான வளங்களைப் பகிர்ந்தளிக்கவும் உதவும். தங்களது முழுத்திறனையும் பயன்படுத்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் உந்துசக்தியாக இருக்க, வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு இதுபோன்ற வரிப்பகிர்வு முறையே அவசியம்.

இதற்கிடையில், தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் போன்ற தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தேசிய சராசரியை விட வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பு, வயதான மக்களுக்கான ஆதரவு திட்டங்களுக்கு ஆகும் செலவினங்கள் அதிகரிக்கும் நிலையில், நுகர்வு அடிப்படையிலான வரி வருவாய் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுபோன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் தேக்கமடையும், 'நடுத்தர வருமான மாநிலம்' எனும் பொறிக்குள் சிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

அதேபோல், வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் நகரமயமாதல் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய சவால்களில் ஒன்றாகும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நாட்டிலேயே வேகமாக நகரமயமாதல் அதிகரிக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக 2031-ம் ஆண்டு அதன் நகர்ப்புற மக்கள்தொகை 57.30 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய தேசிய சராசரியான 37.90 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும். எனவே, நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் எதிர்கால நகரமயமாதலுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவைப்படும் வளங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அதேசமயம் நிதிக்குழுவின் பரிந்துரைகள் பொருளாதார கணக்குகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் சமமாகப் பங்களித்து, அதிலிருந்து பலனடைவதற்கும் உகந்த எதிர்காலத்தைத் தீர்மானிப்பதும் கூட. அது உற்பத்தியை ஊக்குவிப்பது, நகரமயமாதல் சவால்களை எதிர்கொள்வது அல்லது காலநிலை மாற்றத்தை கையாள்வது என எதுவாக இருப்பினும், நிதிக்குழுவின் பரிந்துரை கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியாவை நிலைநிறுத்தத் தேவையான பாதையையும் தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து